

மும்பை
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்க ரிசர்வ் வங்கி இன்று அனுமதி வழங்கியுள்ளது.
பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வங்கியில் இருந்து மொத்தம் 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் ஹவுசிங் டெவலப்மெண்ட் அண்ட் இன்பிராஸ்டிரக்ச்சர் லிமிடெட் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2018-ம் ஆண்டு முதல் கடன் பெற்ற தொகையையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது. இதனால் வங்கி திவாலாகும் அளவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவலால் மகாராஷ்டிராவில் அந்த வங்கி கிளைகளில் கூட்டம் அலைமோதியது. பணத்தை எடுக்க மக்கள் முனைந்தனர்.
இந்த தகவலே தவறாக பரவி மக்கள் வங்கியில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வங்கி அதிகாரிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர்.
இதையடுத்து பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இருந்து பணம் எடுக்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. மேலும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள அந்த வங்கி கடன் கொடுக்கவும், நிதி திரட்டவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்தநிலையில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இன்று கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் உரிமையாளர்கள் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். உடனடியாக கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.
ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளால் வாடிக்கையாளர்கள் பெரும் அச்சம் அடைந்தனர். தங்கள் பணத்தை தரக்கோரி அவர்கள் வங்கி கிளை முன்பு இன்று திரண்டனர். இதையடுத்து பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்க ரிசர்வ் வங்கி இன்று அனுமதி வழங்கியுள்ளது.