

புதுடெல்லி
வாகன விற்பனை சரிவடைந்து வரும் நிலையில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி பல்வேறு மாடல் கார்களின் விலையை சற்று குறைத்துள்ளது.
இந்தியாவில் வாகன விற்பனை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், விற்பனையகங்கள் மூடல்; முகவர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள், வாகனத் தயாரிப்பாளர்கள் ஆகிய தரப்பில் தொழிலாளர்களை வேலையிலிருந்து அனுப்புதல் என்று கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
வங்கிகள் அல்லாத நிதித் துறை நிறுவனங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவது, அதனால் வாகனங்கள் வாங்குவதற்குக் கடன் கொடுப்பது குறைந்திருப்பது, வாகனக் காப்பீட்டுக்கான தொகைகள் உயர்ந்திருப்பது, கார்கள், மோட்டார் வண்டிகள், ஸ்கூட்டர்கள் போன்றவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுவது ஆகியவை மோட்டார் வாகனத் துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகளாக கூறப்படுகின்றன.
கார் விற்பனையை பொறுத்தவரையில் ஆகஸ்ட் மாதத்தில் 41.09 சதவீதம் சரிவடைந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனை 22.33 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் விற்பனை 38.71 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இந்தநிலையில் மாருதி சுஸூகி பல்வேறு மாடல் கார்களின் விலையை சற்று குறைத்துள்ளது. இதுகுறித்து மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘வாகன விற்பனை குறைந்துள்ள நிலையில் அதனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நிறுவன வரி குறைக்கப்பட்டுள்ளது சிறந்த நடவடிக்கை. இதன் மூலம் மாருதி நிறுவனம் ஈட்டும் லாபத்தை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இதனால் பல்வேறு வகையான மாருதி கார் தயாரிப்புகளின் விலை செப்டம்பர் 25-ம் தேதி முதல் குறைக்கப்படுகிறது.
சுவிப்ட் டீசல், செலிரோ, பெலினோ டீசல், விட்ரா பிரஸிரா, எஸ் - கிராஸ், ஆல்டோ 800, கே 10 உள்ளிட்ட கார்களின் விலை 5000 ரூபாய் அளவில் குறைக்கப்பட்டுள்ளது. சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் அளவில் விலை குறைப்பு இருக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறு வனங்களுக்கான வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீத மாகக் குறைத்தார். இந்த நடவடிக் கையால், சந்தையில் பட்டி யலிடப்பட்டுள்ள முன்னணி 1000 நிறுவனங்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி மிச்சமாகும்.