

புதுடெல்லி
கடந்த வாரம் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பால் வங்கித் துறை, நுகர்வுப் பொருட்கள் விற்பனைத் துறை போன்றவை அதிக பயன்பெரும். ஆனால், தகவல் தொழில்நுட்பத் துறை, மருந்துத் துறை போன்றவைக்கு எந்தப் பலனும் இல்லை என்று ஐசிஐசிஐ டைரக்ட் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஐடி மற்றும் மருந்துத் துறைக்கு ஏற்கெனவே வரி வகிதம் குறைவாகவே உள்ளது. பிற நிறுவனங்களுக்கு அதிரடி வரி குறைப்பு மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அந்நிறுவனங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே ஐடி மற்றும் மருந்துத் துறைகளின் வளர்ச்சியை விட பிற துறை நிறுவனங்களின் வருடாந்திர வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவனங்களுக்கான நிறுவன வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்தார். அதேபோல் புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான வரியை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்தார்.