சவுதி அராம்கோ தாக்குதல் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

சவுதி அராம்கோ தாக்குதல் எதிரொலி: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
Updated on
1 min read

புதுடெல்லி

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ மீது இரு வாரங்களுக்கு முன் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.59-ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.31-ம் உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 27 பைசா உயர்ந்து ரூ.73.62 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 18 பைசா உயர்ந்து ரூ.66.74 ஆகவும் உள்ளது.

இரு வாரங்களுக்கு முன் சவுதி அரேபியா வைச் சார்ந்த எண்ணெய் நிறுவனமான அராம்கோ மீது ஏமானிய கிளர்ச்சிப் படையினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி னர். அதில் அபைக் மற்றும் குறைஸ் ஆகிய இடங்களில் உள்ள அந்நிறுவனத்தின் எண்ணெய் ஆலைகள் பாதிப்புக்கு உள்ளாகின. கிட்டத்தட்ட 5.7 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில் சவுதி அரேபியாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவின் எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு சவுதி அரேபியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது இந்தத் தாக்குதலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. மேலும் விலை உயரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் எண்ணெய் விநியோகம் குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சவுதி அரேபியாவின் பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் பேசினார். இந்தியாவுக்குத் தேவையான எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்தியாவுக்கான எண்ணெய் தேவையில் 83 சதவீதம் அளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஈராக்குக்கு பிறகு சவுதியிடமிருந்தே இந்தியா அதிக அளவில் எண்ணெய் வாங்குகிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 2 மில்லியன் டன் அளவில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது. இம்மாத நிலவரப்படி 1.3 மில்லியன் டன் எண்ணெயை சவுதி இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. 0.7 மில்லியன் டன் மீதமுள்ளது. அவையும் முறையாக வழங்கப்படும் என்று சவுதி அரசு உறுதி அளித்துள்ளது. 2018-19 நிதி ஆண்டில் இந்தியா மொத்தமாக 207 மில்லியன் டன் எண்ணெயை இறக்குமதி செய்தது. அதில் சவுதியிடமிருந்து 40 மில்லியன் டன் அளவில் இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in