Published : 21 Sep 2019 11:30 AM
Last Updated : 21 Sep 2019 11:30 AM

டிஜிட்டல் பரிமாற்றத்தில் பணம் உரியவருக்குச் சேராவிட்டால் வாடிக்கையாளருக்கு ரூ100 அபராதமாக வங்கி வழங்கிட வேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

மும்பை

டிஜிட்டல் பரிமாற்றம், ஏடிஎம் பரிமாற்றம், யுபிஐ உள்ளிட்டவற்றில் வாடிக்கையாளர் அனுப்பும் பணம் உரியவர்களுக்குச் சென்று சேராமல் பணம் கணக்கில் இருந்து கழித்துக்கொள்ளப்படும் புகார்களுக்கு உரிய காலத்தில் வங்கிகள் தீர்வு காண வேண்டும், இல்லாவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளருக்கு ரூ.100 அபராதமாக வங்கி செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது

வாடிக்கையாளர்களின் குறைகளைக் குறித்த நேரத்தில் தீர்த்தல் மற்றும் இழப்பீடு வழங்குதல் என்ற தலைப்பில் நேற்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி டிஜிட்டல் பரிமாற்றமாக, செல்போனில் வாயிலாக அனுப்பும் பணம், யுபிஐ, ஆன்லைன் பரிமாற்றம், கூகுள் பே, போன்பே, வங்கிகளின் ஆப்ஸ் என அனைத்திலும் இன்று மக்கள் பணப்பரிமாற்றம் செய்கின்றனர்.

ஆனால், இந்த அனைத்து பரிமாற்றங்களிலும் வாடிக்கையாளர் அனுப்பும் பணம் மற்றொருவருக்குச் சென்று சேர்வதில் சில நேரங்களில் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.

அது செல்போனில் உள்ள நெட்வொர்க் பிரச்சினை அல்லது வங்கிகளின் சர்வர் பிரச்சினை காரணமாக ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும்போது, வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் உரியவருக்குச் சென்று சேராமல், அனுப்பியவர் கணக்கிலும் பணம் கழித்துக்கொள்ளப்படும். எப்போது உரியவருக்குச் சேரும் என்பது தெரியாமல் பணம் அனுப்பியவர் வேதனைக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகக்கூடும்.

இதுதொடர்பாக வங்கிகள் பல நேரங்களில் மெத்தனமாக நடந்துகொண்டு பணம் இழந்த வாடிக்கையாளர்களுக்குத் தாமதமாகப் பணத்தைத் திருப்பி அனுப்பியுள்ளன. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து அனைத்துத் தரப்பினருடனும் கலந்து பேசி, புதிய அபராதத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் உரியவருக்குச் சேராமல், பணமும் வாடிக்கையாளர் கணக்கில் இருந்து பிடிக்கப்பட்டால் அந்தக் குறைபாட்டுக்கு உரிய காலக்கெடுவுக்குள் அதாவது குறைந்தபட்சம் 5 நாட்களில் வங்கிகள் பதில் அளிக்க வேண்டும், அல்லது பணத்தை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 அபராதமாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் செலுத்த வேண்டும்

யுபிஐ, இவாலட், கூகுள் பே, போன்பே, பேடிஎம், வங்கிகளின் ஆப்ஸ், ஏடிஎம், ஐஎம்பிஎஸ் மூலம் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு மிகவும் உதவியாக இருக்கும்.

இதுகுறித்து ரிசர்வ வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

"வாடிக்கையாளர்கள் செய்யும் மின்னனு பணப்பரிமாற்றம் உரியவர்களுக்குச் சென்று சேராமல் இருக்கும்போது, அதைக் குறித்த காலக்கெடுவுக்குள் வங்கிகள் தீர்க்க வேண்டும் இல்லாவிட்டால் இழப்பீடு வழங்குதலே வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை வரவழைக்கும்.

இந்தப் புதிய விதிமுறைகள் இ வாலட், டிஜிட்டல் பரிமாற்றம் மட்டுமின்றி ஏடிஎம் மூலம் நடக்கும் பரிமாற்றம், ஐஎம்பிஎஸ் உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும்.

குறித்த காலத்துக்குள் வாடிக்கையாளர்களின் பணம் ஒப்படைக்காவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ரூ100 அபராதமாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

ஏடிஎம் பரிமாற்றம்

ஏடிஎம் பரிமாற்றத்தில் வாடிக்கையாளர்கள் மற்றொருவருக்குப் பணம் அனுப்பும்போது பணம் வாடிக்கையாளர் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு, ஆனால், உரியவருக்குப் பணம் வழங்காமல் இருந்தாலோ அல்லது உரியவருக்குப் பணம் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்தாலோ, அந்தக் குறைபாட்டுக்கு 5 நாட்களில் தீர்வு வழங்கி பணம் வழங்கிட வேண்டும் இல்லாவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

ஐஎம்பிஎஸ், யுபிஐ மூலம் பரிமாற்றம்

ஐஎம்பிஎஸ், யுபிஐ மூலம் பரிமாற்றம் செய்யும் போது வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பணம் பிடிக்கப்பட்டு, பணம் பெறுவோர் கணக்கில் பணம் சென்றுசேராமல் இருந்தால், 24 மணிநேரத்துக்குள் அந்தக் குறை தீர்க்கப்பட்டு பணம் உரியவருக்குச் சேர்க்கப்பட வேண்டும் அல்லது வாடிக்கையாளருக்கு வங்கி பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தாமதாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 அபராதமாக வாடிக்கையாளருக்கு சம்பந்தப்பட்ட வங்கி வழங்க வேண்டும்.

யுபிஐ மூலம் பரிமாற்றம் செய்யும்போது பணம் வாடிக்கையாளருக்கு பிடிக்கப்பட்டுவிடும், உரியவருக்கும் பணம் வந்ததாக உறுதிச் செய்தி வந்துவிடும். ஆனால், பணம் வரவு வைக்கப்படாமல் இருக்கும். இந்தக் குறைபாட்டுக்கு 5 நாட்களில் வங்கி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் தாமதாகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளருக்கு ரூ.100 அபராதம் வங்கி வழங்க வேண்டும்.

கார்டு டூ கார்டு பரிமாற்றம்

டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பரிமாற்றம் செய்யும் போது, உரிய கணக்கில் பணம் சென்றுசேராவிட்டால் அடுத்த ஒரு நாளுக்குள் வாடிக்கையாளருக்கு வங்கி பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளருக்கு அபராதமாக ரூ.100 வங்கி வழங்கிட வேண்டும்

இதேபோல ஆதார் அடிப்படையான பேமென்ட் முறை, பிபிஐ போன்றவற்றிலும் பணம் அனுப்பி உரியவருக்கு சென்றுசேராவிட்டால் 24 மணிநேரத்தில் வாடிக்கையாளருக்குப் பணத்தை வங்கி திருப்பி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ.100 அபராதமாக வாடிக்கையாளருக்கு வங்கி அளிக்க வேண்டும்

இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x