Published : 20 Sep 2019 12:07 PM
Last Updated : 20 Sep 2019 12:07 PM

உள்நாட்டு நிறுவனங்களுக்கான புதிய தொழில் சலுகைகள் என்னென்ன? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

பனாஜி

பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் வகையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி, செஸ் மற்றும் கூடுதல் வரி உள்ளிட்டவற்றை 25.17 சதவீதமாகக் குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

கோவா நகரில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக இந்த அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பையடுத்து பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்து, நிப்டி 1,900 புள்ளிகளுக்கு மேல் சென்றது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீமாகக் குறைந்தது. இதையடுத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைத் திட்டங்களை அறிவித்து வருகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை 3 கட்டங்களாக பல்வேறு நிதிச்சலுகைகளை நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் கோவா மாநிலத்தில் இன்று 32-வது ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆட்டோமொபைல் துறைக்கான வரிச்சலுகை இருக்குமா, வரிக்குறைப்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்த சூழலில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கும் முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1. உள்நாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கு செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகிய அனைத்தும் சேர்த்து கார்ப்பரேட் வரி 22 சதவீதமாகக் குறைப்படுகிறது. தற்போது 30 சதவீதம் இருந்தது. ஒட்டுமொத்த செஸ் மற்றும் கூடுதல் வரி ஆகியவை சேர்த்து கார்ப்பரேட் வரி 25.17 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எம்ஐடி எனப்படும் குறைந்தபட்ச மாற்றுவரியும் இந்நிறுவனங்கள் மீது விதிக்கப்படாது.

2. புதிய உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவீதமாக இருந்தது. அது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. முழுமையான வரியாக 17 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தச் சலுகை அனைத்தும் முதலீட்டை ஊக்கப்படுத்தி, வளர்ச்சியை அதிகப்படுத்தத்தான். இந்த அறிவிப்பு அனைத்தும் நடப்பு நிதியாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதலே நடைமுறைக்கு வரும்.

3. நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிம்மதி அளிக்கும் வகையில் எம்ஏடி எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்து விரைவில் அவசரச் சட்டமாக கொண்டுவரப்படும்.

4. அதேபோல நிறுவனங்கள் 22 சதவீத வருமான வரி செலுத்துபவையாக இருந்தால், அந்த நிறுவனங்கள் குறைந்தபட்ச மாற்றுவரி (MAT) செலுத்தத் தேவையில்லை .

5. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் பங்குகள் மூலம் கிடைக்கும் தொகைக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை.

6. பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் ஆதாயம் அடையும் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சூப்பர் ரிச் வரி விதிக்கப்படாது.

7. அதேபோல ஜூலை 5-ம் தேதிக்கு முன்பாகப் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பங்குகளை வாங்கி இருந்தாலோ அல்லது விற்பனை செய்திருந்தாலோ சூப்பர் ரிச் வரி விதிக்கப்படாது.

8. மேலும் நிறுவனங்கள் தங்களின் சமூகப் பொறுப்பு நிதியான 2 சதவீதத்தை ஐஐடி, என்ஐடி மற்றும் தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்களுக்குச் செலவு செய்யலாம்.

9. இந்த வரிச்சலுகைகள் அனைத்தும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஊக்கப்படுத்தும். வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிட்டு, வருவாயை உயர்த்தும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x