கோவாவில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பைக், காருக்கு வரிக்குறைப்பு இருக்குமா?

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read


புதுடெல்லி

நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் கோவாவில் நாளை (வெள்ளிக்கிழமை) 37-வது ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டம் நடக்கிறது.

கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட சரிவு, இருசக்கர வாகன விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி, நுகர்பொருட்களில் ஏற்பட்ட தேக்கம் ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாகக் குறைந்தது. ஜூலை மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 2.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. நாளை ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் இச்சிக்கல்களுக்குத் தீர்வு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது

கோவாவில் நாளை நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடுகின்றனர். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றபின் நடத்தும் 2-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும்.

பொருளாதார வளர்ச்சிக் குறைவை நாடு சந்தித்து வரும் நிலையில் பெரும்பாலான துறையினர் வரிக்குறைப்பை எதிர்நோக்கி இருக்கின்றனர். அதற்கு ஏற்றார்போல் மூன்று முறை கூடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் சில சிறப்புச் சலுகை திட்டங்களை அறிவித்தார்.

ரியல் எஸ்டேட் துறையை ஊக்கப்படுத்தவும், ஏற்றுமதியை உயர்த்தவும் 70 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.
ஆட்டோமொபைல் துறையினர் தங்களுக்கு விதிக்கபட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்கக் கோரி தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். கார் விற்பனை குறைந்ததற்கு ஜிஎஸ்டி வரியும் காரணம் என்று ஆட்டோமொபைல் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆதலால், நாளை கூட்டத்தில் ஆட்டோமொபைலுக்கான வரிக்குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதுதவிர சிமெண்ட் உற்பத்தித் துறையினர், வேகமாக நுகரும் பொருட்கள் துறையான எப்எம்ஜிசி துறையினர், ஓட்டல் துறையினரும் தங்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார வல்லுநர்கள் கருத்துப்படி மக்களின் நுகர்வைத் தூண்டிவிடும்பட்சத்தில் பொருளாதாரம் எதிர்வரும் பண்டிகை காலத்தில் ஓரளவுக்கு சீராக முயற்சிக்கும்.

ஆனால், நாளை நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் சொகுசு ஓட்டல் மற்றும் வெளிப்புற சமையல் சேவை ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள 28 சதவீத சேவை வரிக்குறைப்பு குறித்து பரிசீலிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஆட்டோமொபைல் துறைக்கு ஏதேனும் வரிக்குறைப்பு செய்தால், அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். ஜிஎஸ்டி கவுன்சிலில் வரிக்குறைப்பு இருக்கும் என்பதாலேயே பலர் வாகனம் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போட்டுள்ளனர். ஆனால், நாளை எந்த அளவுக்கு வரிக்குறைப்பு இருக்கும் என்பது தெரியவில்லை.


பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in