

புதுடெல்லி: சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ மீது கடந்த வாரம் ஆளில்லா விமானம் மூலம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் வரவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது.
இந்தியா, சவுதி அரேபியாவிடமிருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. அராம்கோ மீதான தாக்குதலால் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் சப்ளை தடைபடாது என்று சவுதி அரேபியா கூறியபோதிலும், நிச்சயம் பாதிப்பு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்னெஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் முன்னாள் ரஷ்ய துணை அதிபர் இகோர் செச்சின் உடன் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘எரிபொருள் சந்தையின் மேம்பாடுகள், கச்சா எண்ணெய் ஏற்றுமதி இறக்குமதி, அராம்கோ நிறுவனம் மீதான தாக்குதல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான திட்டம் ஆகியவை குறித்து பேசப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க அளவில் இயற்கை எரிவாயுவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.