Published : 18 Sep 2019 10:03 AM
Last Updated : 18 Sep 2019 10:03 AM

இந்த மாத இறுதிக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தி சீராகும்: சவுதி அரேபியா நம்பிக்கை

ஜெட்டா

சவுதி அரேபியாவில் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கச்சா எண்ணெய் ஆலைகளில் இந்த மாத இறுதிக்குள் முழு அளவில் உற்பத்தி தொடங்கும், நிலைமை முற்றிலும் சீராகும் என அந்நாட்டு அரசு உறுதியுளித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த உற்பத்தி நிறுத்தம் இன்னும் பல வாரங்களுக்கு தொடரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதியில் உள்ள அந்த ஆலையில் ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஏமன் தீவிரவாதிகள் என்றாலும் அதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. உடனடியாக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 5.61 டாலர் அளவுக்கு உயர்ந்து, 60.46 டாலராக அதிகரித்தது.

இந்தநிலையில் தாக்குதலுக்கு ஆளான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் வயல்களை சீராக்கும் பணிகள் வேகமாக நடந்து வருவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் நிலைமை முற்றிலுமாக சீர் செய்யப்பட்டு பழையபடி உற்பத்தி நடைபெறும் என சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியா எரிசக்தி துறை அமைச்சர் அப்துல் அஜிஸ் பின்சல்மான் கூறுகையில் ‘‘தாக்குதலில் பாதிக்கப்பட்ட எண்ணெய் ஆலைகளை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களிலேயே ஒரளவு பணிகள் முடிந்து முன்பு இருந்தநிலையில் 50 சதவீத கச்சா எண்ணெய் துரப்பன பணிகள் நடந்து வருகின்றன.

அடுத்த ஒரு சில நாட்களில் பணிகள் வேகமாக நடைபெறும். இந்த மாத இறுதிக்குள் பழையபடி கச்சா எண்ணெய் உற்பத்தி தொடங்கும். பழைய நிலை தொடரும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x