Published : 17 Sep 2019 09:39 AM
Last Updated : 17 Sep 2019 09:39 AM

அமெரிக்காவுடனான பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

புதுடெல்லி

இந்தியா-அமெரிக்கா இடையிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தி வருவதாகவும், விரைவில் தீர்வு எட்டப்படும் என்றும் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். சர்வதேச அளவில் பொருளாதார சூழல் நிலையற்று உள்ளது. இந்தியாவின் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்துவருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதார தடை, வர்த்தகப் போர்களை அறிவித்து அமல்படுத்தினார்.

இவை தொடர்பாக இந்தியாவுக்கும் சில பாதிப்புகள் இருந்தன. மேலும் விசா தொடர் பான விவகாரங்கள், இறக்குமதி வரி விவகாரம் உள்ளிட்டவற்றிலும் இருநாட்டுக்குமிடையே பிரச்சினைகள் இருந்துவருகின்றன. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆகும் இரும்பு, அலுமினியம் பொருட்களுக்கு இந்தியா 28 சதவீத வரி விதித்தது. இதையடுத்து அமெரிக்கா, இந்தியா மீது உலக வர்த்தக மையத்தில் புகார் அளித்தது.

புதிய ஒப்பந்தங்கள்

இதுபோன்ற இந்தியா-அமெரிக்கா இடையிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருநாட்டுக்குமிடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடந்துவரு
வதாகவும், இரு நாட்டுக்கு மிடையிலான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்றும் அவர் கூறினார். வரும் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் சந்தித்து பேச இருப்பதாகவும், அப்போது அவர்கள் இருவரும் இருநாட்டுக்கு இடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல், சில ஒப்பந்தங்களையும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.

அமெரிக்காவுடனான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் பட்சத்தில் அவற்றால் பொருளாதாரம், மற்றும் பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா 54.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. 33.1 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

ஏற்றுமதி காப்பீட்டுக்கான பிரீமியம் குறைப்பு சிறு ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி காப்பீட்டுக்கான பிரீமியம் குறைப்பது குறித்து அமைச்சரவையில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். தற்போது பிரீமியம் 0.72 சதவீதமாக உள்ளது. இதை 0.6 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ரூ.80 கோடி வரம்புக்குள் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x