

டோக்கியோ: கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹிரோடோ சைகாவா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கார்லோஸ் கோஸன், நிதி முறைகேடு காரணமாக சிறை தண்டனை பெற்றார்.
இதையடுத்து தலைவர் பதவிக்கு 65 வயதான சைகாவா நியமிக்கப்பட்டார். இவருக்கு வழங்கப்பட்ட ஊதியமானது நிறுவன பங்குகள் சார்ந்தது. அதாவது பங்குகள் விலை உயரும்போது இவருக்கு ஊதியமும் உயரும். இவ்விதம் அதிக ஊதியம் பெறுவது நிறுவனத்தில் பெறும் பிரச்சினையை உருவாக்கியது. இதுகுறித்து இயக்குநர் குழு கூட்டத்திலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இவர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.
இவரது பதவி விலகல் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிசான் நிறுவனம், இந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான (சிஓஓ) யாஷிரோ யாமௌசியை தற்காலிக தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
இவர் கூடுதல் பொறுப்பாக சிஓஓ பதவியையும் வகிப்பார். இதனால் அக்டோபர் மாதத்துக்குள் நிறுவனத்துக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. 1981-ம் ஆண்டு நிசான் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த யாமௌசி 1985-ம் ஆண்டிலேயே கொள்முதல் பிரிவின் மேலாளராக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஜூன் முதல் இவர் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார்.