Published : 14 Sep 2019 01:07 PM
Last Updated : 14 Sep 2019 01:07 PM

தொடர்ந்து குறைந்து வரும் தங்கத்தின் விலை: இன்று என்ன விலை?

சென்னை

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.224 குறைந்து ரூ.28 ஆயிரத்து 672-க்கு விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் விலை அண்மைக் காலமாக உயர்ந்தது.

இதனால் உள்ளூர் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கிடையே செப்.4-ம் தேதி வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாகக் குறைந்து வருகிறது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 224 ரூபாய் குறைந்து ரூ.28 ஆயிரத்து 672 ஆக விற்பனை ஆகி வருகிறது. அதாவது கிராம் ஒன்றுக்கு 28 ரூபாய் குறைந்து 3,584 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே போல 8 கிராம் சுத்தத் தங்கத்தின் விலையும் பல நாட்களுக்குப் பிறகு ரூ.30 ஆயிரத்தில் இருந்து குறைந்துள்ளது. இதன்படி 8 கிராம் சுத்தத் தங்கம் ரூ.29 ஆயிரத்துக்கு 928-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்தது
தங்கத்தைப் போலவே வெள்ளியின் மதிப்பும் கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், அண்மையில் வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 2 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.48.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி, ரூ.48,700-க்கு விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x