

ஹெச்டிஎப்சி லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஸ்டாண்டர்டு லைப் நிறுவனம் தன்னுடைய முதலீட்டை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஹெச்டிஎப்சியின் தலைவர் தீபக் பரேக் தெரிவித்தார்.
தற்போது ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஸ்டாண்டர்டு நிறுவனத்தின் பங்கு 26 சதவீதமாக இருக்கிறது. இதனை 35 சதவீதமாக உயர்த்த ஸ்டாண்டர்டு திட்டமிட்டு வருகிறது.
இது இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், 35 சதவீதம் வரை உயர்த்த ஸ்டாண்டர்டு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தீபக் பரேக் தெரிவித்தார். இது குறித்த இறுதி முடிவு இன்னும் நான்கு வாரங்களில் எடுக்கப்படும் என்று ஹெச்டிஎப்சியின் துணைத்தலைவர் கெகி மிஸ்திரி தெரிவித்தார். ஐபிஓ வெளியிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு இன்னும் ஒரு வருட காலம் தேவைப்படும் என்றார்.
அதேபோல ஆயுள் காப்பீடு அல்லாத நிறுவனமான ஹெச்டிஎப்சி எர்கோ நிறுவனம் இப்போதைக்கு ஐபிஓ வெளியிட வாய்ப்பு இல்லை. அதேபோல ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி ஆகிய நிறுவனங்கள் இணைப்பு குறித்து ஏதும் விவாதிக்கப்படவிலை என்றார்.
ஹெச்டிஎப்சி ஸ்டாண்டார்டு லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் அஸிம் பிரேம்ஜி வசம் ஒரு சதவீத பங்கு உள்ளது.