‘அலிபாபா’ தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் ஜாக் மா
பெய்ஜிங்
சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜாக் மா இன்று நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து இன்று முறைப்படி விலகினார்.
சீனாவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் தலைவர் ஜாக் மா. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டதன் மூலம் அலிபாபா 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்துள்ளது.
ஜாக் மாவும் இதன் மூலம் 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல் வேறு நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தி வருகிறது.
ஒருகாலத்தில் ஆங்கிலம் பேச வராத காரணத்தினால் வேலை கிடைக்காமல் திண்டாடியவர். 1999-ம் ஆண்டில் தன்னுடைய மாணவர்களை வைத்து தொடங்கியதுதான் அலிபாபா நிறுவனம்.
55 வயதாகும் ஜாக் மா அலிபாபா நிறுவனத்தில் இருந்து, 2019-ம் ஆண்டு ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.
இந்தநிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி ஜாக் மா இன்று தனது பதவியில் இருந்து வெளியேறினார்.
லிபாபா நிறுவனம் தொடங்கியதன் 20-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் ஜாக் மா முறைப்படி பதவி விலகினார்.
அலிபாபா நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியான, 46 வயதாகும் டேனியல் ஷாங்கிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாகவும், அதேசமயம் இயக்குநர்களில் ஒருவராக தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.
இனி கல்வித்துறையை மேம்படுத்தும் தன்னார்வப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாகவும் கூறினார். அமெரிக்கா- சீனா இடையே வர்த்தகப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜாக் மா தலைவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
