அசோக் லேலண்ட் உற்பத்தி நிறுத்தம்; செப்டம்பரில் விடுமுறை நாட்கள் அறிவிப்பு- வாகன விற்பனை சரிவு எதிரொலி

அசோக் லேலண்ட் உற்பத்தி நிறுத்தம்; செப்டம்பரில் விடுமுறை நாட்கள் அறிவிப்பு- வாகன விற்பனை சரிவு எதிரொலி
Updated on
1 min read


சென்னை
லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை கடும் சரிவடைந்து வரும் நிலையில், அசோக் லேண்ட் நிறுவனம் உற்பத்தியை குறைக்கும் பொருட்டு சென்னை உள்ளிட்ட ஆலைகளுக்கு செப்டம்பரில் கட்டாய விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.

இந்தியாவில் வாகன விற்பனை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், விற்பனையகங்கள் மூடல்; முகவர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள், வாகனத் தயாரிப்பாளர்கள் ஆகிய தரப்பில் தொழிலாளர்களை வேலையிலிருந்து அனுப்புதல் என்று கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

வங்கிகள் அல்லாத நிதித் துறை நிறுவனங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவது, அதனால் வாகனங்கள் வாங்குவதற்குக் கடன் கொடுப்பது குறைந்திருப்பது, வாகனக் காப்பீட்டுக்கான தொகைகள் உயர்ந்திருப்பது, கார்கள், மோட்டார் வண்டிகள், ஸ்கூட்டர்கள் போன்றவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுவது ஆகியவை மோட்டார் வாகனத் துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகளாக கூறப்படுகின்றன.

கூடவே, கனரக வாகன விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சரிவு, சரக்குப் போக்குவரத்தோடும் மக்களின் நுகர்வோடும் இணைத்துப் பார்க்கப்படுகிறது.வாகன விற்பனையின் எண்ணிக்கை வீழ்ச்சியானது ஒட்டுமொத்த பொருளாதார சுணக்கத்துக்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், லாரி, பேருந்து உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அசோக் லேண்ட் விற்பனை குறைவு காரணமாக உற்பத்தியை குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஆலைகளில் உற்பத்தியை குறைக்கும் நோக்குடன் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து லேலண்ட் நிறுவனம் சார்பில் பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான செபிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் செப்டம்பர் மாதம் 16 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. பட்நாகர் ஆலையில் 18 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மும்பை பாந்த்ரா மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள ஆலைகளுக்கு செப்டம்பர் மாதத்தில் தலா 10 நாட்கள் விடுமுறை வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in