இந்தியாவின் ஜிடிபி 8 லட்சம் கோடி டாலராக உயரும்: அரவிந்த் பனகாரியா நம்பிக்கை

இந்தியாவின் ஜிடிபி 8 லட்சம் கோடி டாலராக உயரும்: அரவிந்த் பனகாரியா நம்பிக்கை
Updated on
2 min read

இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடுத்த 15 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி டாலர் அளவுக்கு உயரும் என்று நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார். வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே கூட இந்த இலக்கை இந்தியா எட்டிவிடும் என்று அவர் கூறினார்.

உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி வாய்ப்புள்ள நாடாக இந்தியா உருவாவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

இந்தியாவின் ஜிடிபி தற்போது 2 லட்சம் கோடி டாலராக உள்ளது. பனகாரியாவின் கணிப்புப்படி அடுத்த 15 ஆண்டுகளில் இது நான்கு மடங்கு அதிகரிக்கும் என தெரிகிறது.

இந்திய வங்கி மற்றும் நிதி மையம் ஏற்பாடு செய்திருந்த 6-வது ஆர்.கே. தல்வார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றார் பனகாரியா. வளர்ச்சி, வறுமை மற்றும் பொருளாதார மாற்றம் என்ற தலைப்பில் அவர் மேலும் கூறியது:

உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றின் நிபுணர்கள் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து 10 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இந்தியாவின் ஜிடிபி உயரும் என கணித்துள்ளனர்.

இப்போது நமது ஜிடிபி 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதேபோல அடுத்த 15 ஆண்டுகளில் நமது பொருளாதாரம் 8 லட்சம் கோடி டாலர் அளவுக்கு வளரும். இதன் மூலம் தற்போது மூன்றாமிடத்தில் இருக்கும் ஜப்பானை நாம் பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடத்துக்கு உயர்வோம்.

2003-2004-ம் நிதி ஆண்டு முதல் 2012-13 வரையில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.3 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் (பிபிஎல்) எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போதைய அரசின் கொள்கைகள் மூலம் வளர்ச்சியை எட்டுவதோடு முன்னேற்றப் பாதையில் நிச்சயம் செல்ல முடியும்.

நமது நாட்டின் சேமிப்பு ஜிடிபி-யில் 30 சதவீத அளவுக்கு உள்ளது. இது 35 சதவீத அளவுக்கு உயரும். மேலும் நமது நாட்டில் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற பிரச்சினைக்கு வழியே இல்லை என்று குறிப்பிட்டார்.

அதிகபட்ச வளர்ச்சி மட்டுமே நாட்டில் வறுமையை ஒழிக்க உதவும். நாடு சுதந்திரமடைந்து முதல் 40 ஆண்டுகள் வரை தனி நபர் வருமானம் 50 சதவீத அளவுக்கே வளர்ச்சியடைந்திருந்தது. தாராள மயமாக்கலுக்குப் பிறகுதான் 100 சதவீத அளவுக்கு உயர்ந்தது. இரண்டாயிரமாவது ஆண்டில் வருமானம் 300 சதவீத அளவுக்கு அதிகரித்தது.

மிகக் குறைவாக தனி நபர் வருமானம் இருந்த காலத்தில் பொருளாதார வளர்ச்சி மிக மெதுவாகத்தானிருந்தது. அதேபோல வறுமை ஒழிப்பு மெதுவாகவே நடைபெற்றது. வளர்ச்சி அதிகரித்து தனிநபர் வருமானம் அதிகரித்தபோது வறுமையும் படிப்படியாகக் குறைந்ததையும் உவர் சுட்டிக் காட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in