Published : 31 Aug 2019 05:20 PM
Last Updated : 31 Aug 2019 05:20 PM

நாட்டின் ஜிடிபி குறைவால் யாருக்கு அதிக பாதிப்பு? 

புதுடெல்லி, ஐஏஎன்எஸ்

இந்தியா போன்ற சமநிலையற்ற சமூகத்தில், ஏழை பணக்காரர்கள் அதிகம் வித்தியாசமுள்ள சமூகத்தில் உள்நாட்டுமொத்த உற்பத்தி குறைவு (ஜிடிபி) யாரை அதிகமாகப் பாதிக்கும் என்பது குறித்து பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட உதவும் 5 முதன்மைக் காரணிகளில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் ரியல் எஸ்டேட், வேளாண் துறை, உற்பத்தி மற்றும் தொழில் துறை ஆகியவை கடுமையான பாதிப்பை அடைந்துள்ளளன.

முதல் காலாண்டில் குறிப்பாக உற்பத்தித் துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.

ஏற்கெனவே நாட்டில் வேலையின்மையின் அளவு 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளியியல் அமைப்பு தகவல் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஜிடிபி குறைவு எந்த விதத்தில் சாமானிய மக்களை, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள மக்களை பாதிக்கப் போகிறது என்பது இனிமேல் பொருளாதாரம் செல்லும் பாதையைப் பொறுத்து அதன் வீச்சு அதிகரிக்கும்.

ஆனால், பொதுவாக ஒரு நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி குறைவது பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல, அதனால் ஏற்படும் பாதிப்பு உடனடியாக ஏழை மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். மாறாக இது பணக்காரர்கள், அதிகம் வசதி படைத்தவர்களை அதிக அளவு பாதிக்காது. அதுமட்டுமல்லாமல் சமூகத்தில் ஏற்கெனவே இருக்கும் வேலையின்மையின் அளவையும் ஜிடிபி குறைவு அதிகரித்துவிடும்.

ஜிடிபி குறைவு குறித்து மும்பையில் உள்ள இந்திரா காந்தி பொருளாதார மேம்பாட்டு ஆய்வு மையத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஆர்.நாகராஜ் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது:
" ஒருநாட்டின் மொத்த உள்நாட்டு மொத்த உற்பத்திக் குறைவு என்பது பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல. அடித்தட்டு மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் நல்லதல்ல. கடந்த 2018-19 ஆம் ஆண்டில் நாட்டில் மாத தனிநபர் வருமானம் என்பது ரூ.10 ஆயிரத்து 534 என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஆண்டுக்கு 5 சதவீத ஜிடிபி உயர்வு என்றால், 2019-20 ஆம் நிதியாண்டில் வருமானம் ஆண்டுக்கு ரூ.526 ஆக அதிகரிக்கும்.

ஒருவேளை மாத தனிநபர் வருமானம் 4 சதவீதம் அளவுக்கு வளர்ந்தால், வருமானத்தின் வளர்ச்சி ரூ.421 ஆகத்தான் இருக்கும். அதாவது ஒரு சதவீதத்தை வளர்ச்சி வீதத்தில் குறைத்தால், மாத வருவாயில் மாதத்துக்கு ரூ.105 குறையும். மற்றொரு வகையில் கூறுவதென்றால், ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைந்தால், வருமானத்தில் மாதத்துக்கு ரூ.105 குறையும். ஆண்டுக்கு ஒருவருக்கு ரூ.1,260 இழப்பு ஏற்படும்.

ஜிடிபி வளர்ச்சி குறைந்தால், தனிநபர் வருமானத்திலும் குறிப்பிட்ட அளவும் குறையத் தொடங்கும். அதிலும் இந்தியா போன்ற சமனற்ற சமூகத்தில், அதாவது ஏழை, பணக்காரர்கள் அதிகம் இருக்கும் ஏற்றத்தாழ்வு அதிகம் இருக்கும் சமூகத்தில் இந்த ஜிடிபி குறைவு ஏழைகளைத்தான் பணக்காரர்களைக் காட்டிலும் அதிகமாகப் பாதிக்கும்.
அதேசமயம், ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும். வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். நாட்டின் ஜிடிபியில் ஏற்படும் குறைவு குறிப்பாக வேலைவாய்ப்பைக் குறைத்து, வேலையின்மையை அதிகரிக்கும்".

இவ்வாறு நாகராஜ் தெரிவித்தார்.

நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி என்பது கடந்த 2018-19 ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதாவது கடந்த 2018-19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 8 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன்) 5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம் கடந்த 28-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நடப்பு நிதியாண்டில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.7 சதவீதமாகக் குறையும் என்று கணித்துள்ளது. இதற்குமுன் 7.3 சதவீதம் என்று மதிப்பிட்டிருந்த நிலையில் அதைக் குறைத்துள்ளது.

அதேபோல மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸஸ் கணிப்பில் வரும் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதாரக் காரணிகள் மட்டுமன்றி பல காரணிகளால் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாகக் குறையும் என்று மதிப்பிட்டுள்ளது.

ஐசிஆர்ஏ அமைப்பின் முதன்மை பொருளாதார வல்லுநர் அதிதி நய்யார் கூறுகையில், "நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 5 சதவீதமாக மட்டுமே முதல் காலாண்டில் வளர்ச்சி அடைந்தது எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவானது. அதற்கு முக்கியக் காரணம் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவும், மற்ற துறைகளில் ஏற்பட்ட பாதிப்பும்தான். இதன் தாக்கம் வரும் காலாண்டுகளிலும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x