Published : 31 Aug 2019 01:51 PM
Last Updated : 31 Aug 2019 01:51 PM

5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு 5 சதவீத வளர்ச்சி போதுமா?- பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி,

பிரதமர் மோடி, 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி நாடு நகரும் என்று உறுதியளித்தார். அதை எட்டுவதற்கு 5 சதவீத வளர்ச்சி போதுமா?- பொருளாதார நிபுணர்கள் கூற்று என்ன? ஒரு அலசல்.

ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு குறித்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சி(ஜிடிபி) புள்ளிவிவரம் நேற்று வெளியானது அதில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி சரிந்து பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு இந்த 5 சதவீத பொருளாதார வளர்ச்சி போதுமா எனும் கேள்வி பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி கந்த தாஸ் நிதிக்கொள்கை குழுகூட்டத்தில் சமீபத்தில் பேசுகையில், " கடந்த நிதியாண்டின் 2-வது அரையாண்டில் இருந்து நாட்டின் தேவை வலுவிழக்கத் தொடங்கிவிட்டது, ஆனால் நாம் எதிர்பார்ப்பைக் காட்டிலும் தேவை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

வேளாண் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளும் கடந்த நிதியாண்டு மூன்றாம் காலாண்டில் இருந்து மந்தமாக இருப்பதால், கிராமப்புறத் தேவையை குறைத்துவிட்டது. இவை அனைத்துமே உள்நாட்டில் தேவை மிகமோசமாக வீழ்ச்சி அடைந்திருப்பதையை காட்டுகிறது" எனத் தெரிவித்திருந்தார்.

முதல் காலாண்டில் குறிப்பாக உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.

இவை அனைத்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் சூழல் மோசமான நிலையை நோக்கி நகர்வதையே காட்டுகிறது. அதற்கான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது என்றாலும், அதன் பலன் நீண்டகாலத்தில் மட்டும் பொருளாதாரத்தில் எதிரொலிக்கும். உடனடியாக அதாவது அடுத்த காலாண்டில் அதன்பலன் தெரிவதும் கடினம்தான்.

அதுமட்டுமல்லாமல் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி. சுப்பிரமணியன் கூறுகையில், " அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியப் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சியில் வளர்ந்தால் மட்டுமே பிரதமர் மோடி தொலைநோக்குப் பார்வையான 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும். ஆனால், இப்போதுள்ள 5 சதவீத வளர்ச்சியால் அடைவது மிகக்கடினம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் கருத்தைத்தான் பல பொருளாதார வல்லுநர்களும் தெரிவிக்கின்றனர். இந்திய பொருளாதாரத்துக்கு நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டசரிவு என்பது உடனடியாக ஏற்பட்டது அல்ல. கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் இருந்தே சரிவு மெல்லத் தொடங்கிவிட்டது.

அதன்காரணமாத்தான் கடந்த 2018-19-ம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2019-2020-ம் ஆண்டில் 5 சதவீதமாக அதாவது ஏறக்குறைய 3 சதவீதம் ஒரு ஆண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுகுறித்து எடில்வீஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் பொருளாரதார வல்லுநர் மாதவி அரோரா கூறுகையில், " கடந்த 2019-ம் நிதியாண்டில் ஏற்பட்டிருந்த சரிவைக் காட்டிலும் 2020ம் ஆண்டு தொடக்கத்தில் அதிகமாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 5 சதவீதமாக குறைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது, இதன் மூலம் வளர்ச்சி வேகம் குறைந்து வருகிறது என்பது தெளிவாகிறது.

நிதி மற்றும் பணக்கொள்கைக்கு அதிகமான முக்கியம் அளிக்க வேண்டும். இந்த வீழ்ச்சி பொருளாதார சுழற்ச்சியில் ஏற்பட்ட கோளாறால் ஏற்பட்டது அல்ல, பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையாக இருக்கிறது. உடனடியாக அரசு இதை கவனித்து சரி செய்வது அவசியம்" எனத் தெரிவித்தார்.

ஆனந்த் ரதி பங்கு விற்பனை நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் சுஜன் ஹர்ரா கூறுகையில், " இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சரிந்தது நமது எதிர்பார்ப்பைக் காட்டிலும் மோசமானது. வளர்ச்சி வீதத்தில் இந்தியா தற்போது சீனாவைக் காட்டிலும் பின்தங்கி இல்லை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுக்கும் பின்தங்கி இருக்கிறோம்.

கடந்த 2014-முதல் 2018-ம் ஆண்டுவரை சராசரியாக 7.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால், 2019-19ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 8 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால் அதன்பின் தனது வளர்ச்சி வேகத்தை இழக்கத் தொடங்கி இருக்கிறது" எனத் தெரிவித்தார்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x