

மும்பை,
2018-19 ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதி அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. ஆண்டுதோறும் வெளியாகும் இந்த அறிக்கையில் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு, செயல் திறன், பொருளாதாரச் சூழலை உயர்த்துவதற்கான ஆலோசனை ஆகியவை குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது
ரிசர்வ் வங்கி தனது ஈவுத்தொகை மற்றும் உபரி நிதியில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில் வெளியாகும் இந்த அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஆண்டு அறிக்கையில் மூன்று முக்கிய விஷயங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வரவு-செலவு அறிக்கை, பொருளாதாரம் குறித்த கணிப்பு, வங்கி முறை செயல்பாடு ஆகியவை கவனிக்கப்படுகிறது.
ஆண்டு வரவு-செலவு அறிக்கை
ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் உபரி நிதி ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு அளிக்க இருக்கும் நிலையில் வரவு-செலவு அறிக்கையில் அது குறித்து என்ன சொல்லப் போகிறது என்பதும், ரிசர்வ் வங்கி அளிக்கும் விளக்கமும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 2018-ம் ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் 2018, ஜூலை 30-ம் தேதியோடு முடிந்த காலத்தில் உபரித்தொகை மொத்தமாக 9.49சதவீதம் அதிகரித்து ரூ.50 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளதாக அறியவருகிறது. இந்த முறை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பொருளாதார வளர்ச்சிக் கணிப்பு
நாட்டில் தேவைப் பற்றாக்குறை காரணமாக பொருளாதார வளர்ச்சி வேகம் சரிந்துள்ளது குறித்து ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. கடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில்கூட பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் பொருட்டு, வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது. அதுமட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகக் குறைந்தது.
மந்தமாக இருக்கும் தேவையைத் தூண்டிவிடுவது, குறிப்பாக தனியார் முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி அதிகமான முன்னுரிமை அளிக்க ஆலோசனை வழங்கியது. இந்த சூழலில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் போக்கு குறித்தும், அதன் நிலை குறித்தும் இன்றைய அறிக்கையில் இடம் பெறும்.
வங்கி முறையின் நிலை
ஒழுங்கமைப்பில் உள்ள வங்கி முறை, வங்கி சாராத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிலை குறித்து அறிக்கையில் இடம் பெறும். வங்கி சாராத நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஆகியவை இழப்பில் இருந்து காக்க அதிக கண்காணிப்பு தேவை என்று முன்பு கூறியிருந்தது. இதுகுறித்து இன்றைய அறிக்கையில் அடுத்தகட்டமாக இந்த நிறுவனங்களை உயர்த்த என்ன ஆலோசனைகள் வழங்கப்போகிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.