

சென்னை
சர்வதேச சந்தையில் தொடரும் பொருளாதார சரிவினால் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 உயர்ந்தது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை, தேவை, பங்குசந்தை மாற் றங்கள் ஆகியவற்றால் உள்ளூரில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற் பட்டுள்ளதால், தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் நேற்று திடீரென தங்கத்தின் விலையில் பெரிய அளவில் உயர்வு காணப்பட்டது. இதனால், சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.29 ஆயிரத்து 704க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 713-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 680-க்கு விற்கப்பட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்திருப்பதால், பெரும்பாலான நகைக் கடைகள் கூட்டமின்றி காணப்பட்டன. அடுத்த சில வாரங்களில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை நெருங்கும் என நகை கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரி கள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தங்கத்தில் முதலீடு செய்வது 40 சதவீதம் அதிகரித்து விட்டது. இதனால், எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை எட்ட வாய்ப்புள்ளது. தங்கத்தின் விலை இன்று (நேற்று) உயர்ந்திருந்ததால், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்திருந்தது.
வழக்கமான நாட்களைவிட 30 சதவீதம் நகை விற்பனை குறைந்துள்ளது. மத்திய அரசு சில நடவடிக்கை எடுத்துள்ள தால், அடுத்த வாரத்தில் தங்கம் விலையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.