நிதியமைச்சர் அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்கு ஆதரவளித்தாலும், பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக சரியலாம்: மூடிஸ் கணிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி,

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார வளர்சிக்காக அறிவித்த திட்டங்கள், முதலீட்டாளர்களுக்கும், வர்த்தக சூழலுக்கும் ஆதரவாக இருந்தாலும், உள்நாட்டு, வெளிநாட்டு காரணிகளால் பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 6.4 சதவீதமாகச் சரிய வாய்ப்புண்டு என்று சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருப்பதாக நிதிஆயோக் துணைத் தலைவர் கடந்த வாரம் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு ஏராளமான சலுகை திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து மூடிஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர் சேவையின் துணைத் தலைவர் வில்லியம் போஸ்டர் கூறியதாவது:

பொருளாதார வளர்ச்சி மந்த நிலையால் கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்த வரிச்சலுகைகள், பல்வேறு துறைகளுக்கான சலுகை திட்டங்கள் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி தூண்டிவிடப்படும். இந்த நடவடிக்கைகள் முதலீட்டாளர்களுக்கு ஆதரவாகவும், வர்த்தகம் செய்யும் சூழலயையும் ஏதுவாக்கும். அரசு வங்கிகளுக்கு மறுமுதலீட்டுக்கு அளிக்கும் பணமும் கடன் அளிப்பதை எளிதாக்கும், நிதிக்கொள்கையை மாற்றுவதும் எளிதாக அமையும்.

ஆனால், இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்கான தூண்டுகோல்தான், எப்படியாகினும் இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு காரணிகள் பெரும் தடையாகவே இருக்கும்.

இதனால் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக சரிவதற்கே வாய்ப்பு அதிகம். இப்போது எடுக்கப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த நிதியாண்டில் பலன் கொடுத்து பொருளாதார வளர்ச்சியை 6.8 சதவீதமாக உயர்த்தும்.

கடந்த 2019- காலண்டர் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 6.2 சதவீதமாக குறைத்தோம். அதற்கு முன்பாக 6.8 சதவீதமாக உயரும் என கணித்திருந்தோம். இவ்வாறு வில்லியம் போஸ்டர் தெரிவித்தார்.

யெஸ் வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் சுப்ஹாதா ராவ் கூறுகையில், " இந்திய பொருளாதார வளர்ச்சியின் கடந்த 3 முதல் 4 காலாண்டாகவே சரிந்து வருகிறது. ஜனவரி மார்ச் காலண்டில் கடந்த 20 காலாண்டுகளாக இல்லாத அளவுக்கு 5.4 சதவீதமாகக் குறைந்தது. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.5 சதவீதமாகவே இருந்தது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு காரணிகளால் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. நிதியமைச்சரின் அறிவிப்புகள் வரவேற்கக்கூடியது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கைகள் நீண்டகாலத்தில் உதவும் " எனத் தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in