

புதுடெல்லி
ரிசர்வ் வங்கி கையிருப்பிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி வாரியக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் நிதி நிலையை ஸ்திர நிலையில் வைத்திருக்க மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தனது கையிருப்பை வலுப்படுத்தி வந்துள்ளது. ஆனால், தேவையான அளவை விட அதிகமான உபரி நிதி ரிசர்வ் வங்கி வசம் இருப்பதாகவும், அந்த நிதியை அரசுக்கு வழங்கினால் பயனுள்ள வகையில் திட்டங்களைச் செயல்படுத்த உதவும் எனவும் கூறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் உபரி நிதி குறித்த விவாதம், நாளடைவில் ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையே மோதலாக மாறியது. இந்த மோதல் பின்னணியில் உர்ஜித் படேல் கவர்னர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளானார். இதையடுத்து ரிசர்வ் வங்கி உபரி நிதியை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் தனது அறிக்கையைச் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வாரியக் குழுவிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், நேற்று இது தொடர்பான விவாதத்தில் ரிசர்வ் வங்கி வாரியக்குழு ஈடுபட்டது. பிமல் ஜலான் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கொடுத்துள்ள பரிந்துரைகளின்படி மத்திய அரசுக்கு முதல்கட்ட உபரி நிதியை இந்த நிதி ஆண்டில் வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ரூ.1,76,051 கோடியை மத்திய அரசுக்கு வழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் திருத்தப்பட்ட பொருளாதார மூலதன செயல்வரைவின்படி 2018-19 நிதி ஆண்டுக்கான உபரி நிதியாக ரூ.1,23,414 கோடி யும், ரூ.52,637 கோடி கூடுதல் ஒதுக்கீடாகவும் வழங்கப்படு வதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பொருளாதார சூழல் மந்தமாக உள்ள நிலையில் சந்தையின் செயல்பாடுகளை ஊக்குவிக்க அரசின் பொது முதலீடு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் சமீபத்தில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மறுமூலதனம் செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வழங்கும் இந்த உபரி நிதி மத்திய அரசு திட்டங்களுக்கும் வங்கிகளுக்கான மறுமூலதனத்துக்கும் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.