

நெஸ்லேயின் மேகி உட்பட முதன்மை நிறுவனங்களின் நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து அதன் விற்பனை 90% சரிவடைந்ததாக அந்தத் துறையைச் சார்ந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தடைக்கு முன்பாக மாதம் ரூ.350 கோடிக்கு விற்று வந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் விற்பனை கடந்த மாதத்தில் ரூ.30 கோடியாக சரிந்துள்ளது.
உணவுப்பொருள் தொழிற்துறையின் மிக முக்கியமான விற்பனைப்பொருளான நூடுல்ஸ் விற்பனை கடுமையாக பாதிப்படைந்ததையடுத்து ஒட்டுமொத்த முதலீடுகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக இந்தத் தொழிற்துறை நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. மேலும் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் “உணவுப்பொருள் நிறுவனங்களை துன்புறுத்துவதாகவும்” அசோசாம் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த மாதத்தில் நூடுல்ஸ் விற்பனை ரூ.350 கோடியிலிருந்து ரூ.30 கோடிக்கு சரிந்துள்ளது. மேகி தடைக்கு முன்னர் ஆண்டுக்கு ரூ.4,200 கோடி விற்பனை இருந்து வந்தது, அதாவது சராசரியாக மாதத்துக்கு ரூ.350 கோடி விற்பனை நடைபெற்று வந்தது. தற்போது மக்கள் இதனை வாங்க கடும் அச்சம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
மேகி உள்ளிட்ட நூடுல்ஸ்கள் பல தடை செய்யப்பட்டதையடுத்து, பேக்கேஜ் உணவு தொழிற்துறையே பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், உணவுப் பாதுகாப்பு சோதனை பெரிய அளவில் முடுக்கி விடப்பட்டதால் தொழிற்துறை நசிவடையும் அபாயம் ஏற்பட்டதாகவும் பெயர் கூற விரும்பாத அந்த அசோசாம் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
உணவுப்பொருள் துறையில் தற்போதைய கணக்கீட்டின் படி ரூ.90,000 கோடிக்கு முன்மொழிவுகள் உள்ளன. இது பாதிப்படைவதோடு, நூடுல்ஸ் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார் அந்த அதிகாரி.
மேகி உற்பத்தியில் நெஸ்லே நிறுவனத்தில் சுமார் 1,500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்போது உற்பத்தி முடக்கப்பட்டதால் இவர்கள் வாழ்வாதாரங்களும் பிரச்சினைக்குள்ளாகியுள்ளது என்று இந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.