

புதுடெல்லி, பிடிஐ
மலேசியாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட வகை பாமாயில் இறக்குமதி வழக்கத்தை விட அதிகமாகியிருப்பதால் உள்நாட்டு தொழில் நசிவடைந்திருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் புகாரை சால்வண்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் எழுப்பியுள்ளது. இந்த அமைப்பு செய்த மனுவை ஆய்வு செய்த மத்திய வர்த்தக அமைச்சகத்தின் விசாரணை அமைப்பான வர்த்தக குறைதீர்ப்பு தலைமை இயக்ககம் (DGTR) உள்நாட்டு உற்பத்தி நசிவடையும் அளவுக்கு மலேசியாவிலிருந்து குறிப்பிட்ட வகை பாமாயில் இறக்குமதி அதிகரித்ததற்கான முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
விசாரணையில் சுத்திகரிக்கப்பட்ட பாமோலின் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அதிகரித்துள்ளதா என்று ஆராயப்படவுள்ளது.
இறக்குமதி அதிகரிப்பு உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதித்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டால் இயக்குனரகம் ‘தடுப்பு வரி’ விதிக்கும். நிதியமைச்சகம் கூடுதல் வரிவிதிப்பு பற்றி தீர்மானிக்கும்.
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே சுதந்திர வாணிப ஒப்பந்தம் உள்ளது, இதன்படி இருநாட்டு வர்த்தகப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரிக்குறைப்புகள் செய்யப்படும்.
இந்நிலையில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சார்பாக செய்யப்பட்ட புகாரில், இறக்குமதி மலேசியாவிலிருந்து பாமாயிலுக்கு அதிகரித்திருப்பதால் உள்நாட்டு உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது மேலும் விற்பனை மற்றும் திறன் பயன்பாடும் குறைந்துள்ளது.
இந்திய பாமாயில் தொழிற்துறையின் சந்தைப் பகிர்மானம் குறைந்து இறக்குமதியின் பகிர்மானம் அதிகரித்துள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.