Published : 18 Aug 2019 12:17 PM
Last Updated : 18 Aug 2019 12:17 PM

இந்தியச் சந்தையிலிருந்து ரூ.8,319 கோடி முதலீட்டை வாபஸ் பெற்ற அயல்நாட்டு முதலீட்டாளர்கள்

சாதகமற்ற இந்திய உள்நாட்டு மற்றும் உலக சந்தை நிலவரங்களால் அயல்நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய மூலதனச் சந்தையிலிருந்து ஆகஸ்ட் மாதம் முதல் பாதியில் ரூ.8,319 கோடியை திரும்பப் பெற்றனர்.

உலக வர்த்தகக் கவலைகள் அயல்நாட்டு போர்ட்போலியோ முதலீட்டு வரி உள்ளிட்ட கவலைகளினால் இவர்கள் பெரிய அளவில் தங்கள் முதலீட்டை சந்தையிலிருந்து திரும்ப பெற்றனர்.

டெபாசிட்டரி தகவல்களின் படி ஆகஸ்ட் 1 முதல் 16ம் தேதிவரை அயல்நாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் ரூ.10,416 கோடிக்கான பங்குகளை விற்றுள்ளனர். ஆனால் கடன் பத்திரங்களில் ரூ.2096.38 கோடி முதலீடு செய்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 10 வர்த்தக அமர்வுகளில் 9 அமர்வுகளில் அயல்நாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை பெருமளவு விற்றுத் தீர்த்ததுதான் நடந்துள்ளது என்று மூத்த பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு ஆய்வாளர் ஹிமான்ஷு ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

கடந்த ஜூலை மாதமும் எப்.பி.ஐ என்று அழைக்கப்படும் இம்முதலீட்டாளர்கள் இந்திய முதலீட்டுச் சந்தையிலிருந்து ரூ.2985.88 கோடியைத் திரும்பப் பெற்றனர்.

ஸ்ரீவஸ்தவா கூறும்போது, “அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கான எஃப்.பி.ஐ வரி குறித்த ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. அதே போல் அதிகரிக்கப்பட்ட சர்சார்ஜ் கட்டணம் ஆகியவையும் அவர்கள் முதலீடு வாபஸுக்குக் காரணமாகிறது, மத்திய பட்ஜெட்டில் அதிபணக்காரர்கள் மீதான வரி அறிமுகம் செய்யப்பட்டதும் இவர்களை எதிர்மறையாகப் பாதித்துள்ளது”

மேலும் இந்தச்சந்தைகளின் மந்த நிலையும், பொருளாதார மந்தநிலையும் இவர்கள் முதலீட்டு வாபஸுக்குக் காரணமாகியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா ஈரான் இடையே மோதல், அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் ஆகியவையும் இவர்களை வெறுப்படையச் செய்துள்ளது.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x