

புதுடெல்லி
நாடு முழுவதும் பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 36.25 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணம் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான தகவலில் தெரியவந்துள்ளது.
பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டம் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூபே டெபிட் கார்டும் ரூ.1 லட்சத்துக்கான விபத்து காப்பீடும் வழங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு ஓடி (ஓவர் டிராப்ட்) வசதி ரூ. 5 ஆயிரத்துக்கு வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் ஆகஸ்ட் 15, 2018-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் உள்ள உறுப்பினர்களில் 53 சதவீதம் பேர் பெண்களாவர். இவற்றில் 83 சதவீதக் கணக்குகள் ஆதார் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜன்தன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டது.
இதன்படி இத்திட்டப் பயனாளிகளுக்கான காப்பீட்டுத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டது. அத்துடன் ஓவர் டிராப்ட் (ஓடி) வசதியும் அளிக்கப்பட்டது. இதன்பிறகு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மத்தியப் பிரதேசதத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக சேவகர் மத்திய நிதியமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜன்தன் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளார். அவருக்கு கடந்த மாதம் 17-ம் தேதி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
‘‘அதன்படி நாடு முழுவதும் தற்போது 36.25 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் உள்ளன. இந்த வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.