Published : 15 Aug 2019 08:13 AM
Last Updated : 15 Aug 2019 08:13 AM

காஃபி டே ஐடி பூங்கா ரூ.3,000 கோடிக்கு விற்பனை: பிளாக்ஸ்டோன் நிறுவனம் வாங்குகிறது

பெங்களூரு

காஃபிடே நிறுவனத்துக்குச் சொந்தமான தொழில்நுட்பப் பூங்காவை (டாங்லின் டெவலப்மென்ட்ஸ்) பிளாக்ஸ்டோன் நிறுவனம் வாங்குகிறது. இதற்காக இந்நிறுவனம் உள்ளூரைச் சேர்ந்த சலர்பூரியா சாத்வா நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ரூ.3 ஆயிரம் கோடிக்கு இந்தப் பூங்காவை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

காஃபி டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்நிறுவனத்தின் கடன் சுமையைக் குறைக்க இயக்குநர் குழு முடிவு செய்து முதல் கட்டமாக தொழில்நுட்ப பூங்காவை விற்க முடிவு செய்தது.

இதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு நிறுவனத்துக்கு உள்ள ரூ.6,457 கோடி கடனை அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவை கையகப்படுத்தும் நடவடிக்கையில் 90 சதவீத பங்கு கள் பிளாக்ஸ்டோன் வசம் இருக்கும். எஞ்சிய 10 சதவீதத்தை சலர்பூரியா நிறுவனம் வைத்திருக்கும். இத் தொகை பலகட்டங்களாக வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதன்படி முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ.2,200 கோடி வரையான தொகை ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும். எஞ்சிய தொகை 2 ஆண்டுகளில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது விற்பனை செய்யப் பட்டுள்ள தொழில்நுட்ப பூங்காவானது 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 4 லட்சம் சதுர அடியில் அலுவலக வளாகம் உள்ளது. இதில் மெபாசிஸ், மைண்ட்ரீ, அசெஞ்சர் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. இப்பகுதியில் மேலும் அலுவலக வளாகம் கட்ட இட வசதி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x