

சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. அதேசமயம் ஈரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் மற்றும் அந்நாட்டின் மீதான சர்வதேச தடை நீக்கம் ஆகிய நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு அதிக பலன் கிடைக்கும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
சர்வதேச தடை நீக்கம் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஈரான் ஈடுபடும். இதனால் அதிக அளவில் கச்சா எண்ணெய் கிடைக்கும். இதனால் விலை குறையும். இது இந்தியாவுக்கு சாதகமான அம்சம் என்று கூறினார்.
சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. ஈரானிலிருந்து அதிகம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 2014-15-ம் நிதி ஆண்டில் ஒரு கோடி டன் அளவுக்கு கச்சா எண்ணெய்யை ஈரானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
ஈரானிடமிருந்து கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக ஒரு கோடி டன் அளவுக்கு கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இப்போது செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யுமா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை. இருப்பினும் ஈரானிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்வதில் பல்வேறு வர்த்தக ரீதியிலான விஷயங்கள் உள்ளன அவற்றை பரிசீலிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
இப்போதைக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஓரளவுக்கு கட்டுபடியாகும் நிலையில் உள்ளது. இப்போதைய விலை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு உள்ளதாக அவர் கூறினார். கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் எண்ணெய் அகழ்வு மற்றும் உற்பத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். இத்தகைய சவாலை எதிர்கொண்டாக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஈரான் அணு குண்டு தயாரிக்கக் கூடும் என்பதால் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பொருளாதார தடை விதித்திருந்தது. தற்போது அணுசக்தி திட்டத்தை நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ளப் போவதில்லை என்று ஈரான் ஒப்புக் கொண்டதை அடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது. இப்போது சர்வதேச பொருளதாரா தடை நீக்கப்பட்டாலும் ஐக்கிய நாடுகள் சபை ஈரானின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கும்.