Published : 13 Aug 2019 05:06 PM
Last Updated : 13 Aug 2019 05:06 PM

டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது: நாம் என்ன செய்ய வேண்டும்?

வங்கிகள் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துக் கொண்டே வருகின்றன. பல வங்கிகள் மக்களின் டெபாசிட் தொகைக்கான வட்டிகளை 0.3-0.5 % பாயிண்டுகள் குறைத்துள்ளன. சில சந்தர்ப்பங்களில் 0.75% பாயிண்டுகளும் குறைக்கப்பட்டுள்ளன.

ஸ்டேட் வங்கியின் பாதையை அடியொட்டி பிற வங்கிகளும் டெபாசிட் தொகைக்கான வட்டியை மத்திய ரிசர்வ் வங்கியின் ரிபோ ரேட்டுடன் இணைக்கின்றன. எனவே வரும் மாதங்களிலும் டெபாசிட்டுக்கான வட்டிகள் மேலும் குறையவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான பாதுகாப்பை நாம் உறுதி செய்யும் பட்சத்தில் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைப்பது நிச்சயம் நமக்கு கவலையளிப்பதுதான். குறிப்பாக மூத்த குடிமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்கும் அன்றாட செலவுகளுக்கும் டெபாசிட் வட்டியையே நம்பியிருப்பதால் வட்டி விகிதக் குறைப்பு கவலையளிக்கவே செய்யும்.

ஆர்பிஐ ரிபோ ரேட்டை சமீபமாக 35 அடிப்படைப் புள்ளிகள் குறைத்தது. டெபாசிட் வட்டி விகிதங்கள் இன்னும் கூட குறையவே வாய்ப்புள்ளது. இதிலிருந்து மீள்வது எப்படி? இதோ சில ஆலோசனைகள்:

உபரித்தொகை உங்களிடம் இருக்கிறதா? அதை வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டாம். குறைந்த தொகை சேவிங்ஸ் டெபாசிட்களுக்கு வங்கிகள் 3.5% வட்டிதான் அளிக்கின்றன. எஸ்பிஐ வங்கியை எடுத்துக் கொண்டால் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் ஆர்பிஐ ரிபோ ரேட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது- அதாவது 2.75% ரிபோ ரேட்டுக்கும் குறைவு (ரூ. 1லட்சத்துக்கும் அதிகமான சேமிப்புக் கணக்குத் தொகைக்கு) இதன் விளைவாக சேவிங்ஸ் கணக்கு வட்டி 2.65% தான். மற்ற வங்கிகளும் ஆர்பிஐ-யின் ரிபோ ரேட்டுடன் வட்டி விகிதத்தை இணைக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே பிக்சட் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் உயரும் என்று காத்திருக்க வேண்டாம். ஆர்பிஐ மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு சில காலம் ஆகலாம்.

எனவே ஓராண்டுக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் முறையைத் தேர்வு செய்தால் 6.5-6.75% வட்டி கிடைக்கும், சில வங்கிகளில் 7% கூட அளிக்கப்படுகிறது.

குறுகிய கால டெபாசிட்டைத் தேர்வு செய்யலாம்:

உங்களுக்கு அவசரப் பணத்தேவை இல்லாத பட்சத்தில் டெபாசிட் காலத்தை நீட்டிக் கொண்டே செல்லலாம். வட்டியும் எதிர்பார்ப்புக்கு இணங்க பெறலாம், ஆகவே நீங்கள் தேர்வு செய்ய வேண்டியது..

2 ஆண்டுகால டெபாசிட் இப்போது கைகொடுக்கும். ஏனெனில் 2 ஆண்டுகள் என்பதால் வட்டி விகிதம் மாறுபட்டாலும் அதன் பயனை பெற முடியும். கடந்த 2-3 ஆண்டுகளாக வட்டி விகிதங்கள் குறுகிய கால அடிப்படையில் மாற்றப்படுகிறது. ஆகவே வட்டி குறைப்பு முதல் அதிகரிப்பு வரை எதுவும் நிகழலாம். பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை வங்கிகள் மேலும் குறைப்பதற்கு முன்பாக சிறந்த வட்டி விகிதத்தை தேர்வு செய்யலாம்.

கடந்த ஓராண்டாக தனியார் வங்கிகள் மற்றும் சில சிறு நிதி வங்கிகள் பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டி வழங்குகிறது. ஆகவே நம் வீட்டுக்கு அருகில் இருக்கும் பொதுத்துறை வங்கியில் நம் சவுகரியத்துக்காக சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் கூட பிற வங்கிகள் பிக்சட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி அளிக்கும் பட்சத்தில் அங்கும் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.

பொதுத்துறை வங்கிகள் இந்தப் பிரிவில் 6.5-6.75% வட்டி அளிக்கிறது, 666 நாட்கள் டெபாசிட்டுக்கு கார்ப்பரேஷன் வங்கி 7% வட்டி அளிக்கிறது. சில தனியார் வங்கிகள், சில சிறு நிதி வங்கிகள் இப்போது கூட 8% வட்டி அளிக்கின்றன. (இந்த வட்டி விகிதங்கள் மாற்றத்துக்குரியவை என்பதால் சமீப வட்டி விகிதம் என்னவென்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்) லஷ்மி விலாஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஆகியவை 2 ஆண்டு டெபாசிட்களுக்கு ஓரளவுக்கு திருப்திகரமான வட்டி விகிதம் வழங்குகிறது.

சிறு நிதி வங்கிகள் இப்போதுதான் நாடு முழுதும் கால்பதிக்கிறது என்பதால் நமக்கு பழக்கமான வங்கிகள் போல் இவை ஆவதற்கு கொஞ்ச காலம் ஆகும்.

மேலும் ஒரே இடத்தில் பெரிய தொகையை டெபாசிட் செய்வதைத் தவிர்க்கலாம். டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் காரண்டி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ((DICGC) ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ரூ. 1 லட்சம் தொகை மற்றும் வட்டிக்கு காப்புறுதி அளிக்கிறது. எனவே டெபாசிட் தொகையைப் பிரித்து ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்வது சிறந்தது. டிஐசிஜிசியின் கீழ் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், லோக்கல் ஏரியா வங்கிகள் மண்டல ஊரக வங்கிகள், சிறு நிதிவங்கிகள், பேமண்ட் வங்கிகள் ஆகியவையும் வருகின்றன.

மூலம்: தி இந்து பிசினஸ்லைன்

ஆசிரியர்: ராதிகா மெர்வின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x