

பெங்களூருவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைண்ட் ட்ரீ இரண்டு வெளி நாட்டு நிறுவனங்களை 483 கோடி ரூபாய்க்கு வாங்க இருக் கிறது. தன்னுடைய டிஜிட்டல் சேவைகள் பிரிவை பலப்படுத்தும் நடவடிக்கைக்காக இந்த இரு நிறுவனங்களை மைண்ட் ட்ரீ வாங்க முடிவு செய்திருக்கிறது.
இந்த இரு நிறுவனங்களின் 100 சதவீத பங்குகளை வாங்குவதற்கு இயக்குநர் குழுமம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த ரிலேஷனல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 63.5 கோடிக்கு (1 கோடி டாலர்) வாங்க முடிவு செய்திருக்கிறது. அதேபோல இங்கிலாந்தை சேர்ந்த புளுபின் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 419.6 கோடி ரூபாய்க்கு (4.23 கோடி டாலர்) வாங்க முடிவு செய்திருக்கிறது.
மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளும் நேற்று வெளியாயின. நிறுவனத்தின் நிகர லாபம் 6.8 சதவீதம் உயர்ந்து 138.2 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் நிகர லாபம் 129.4 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் வருமானம் 16.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 843.5 கோடி ரூபாயாக இருந்த வருமானம் இப்போது 981.6 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.