

புதுடெல்லி,
ஜூலை மாதம் பயணிகள் வாகனங்களின் விற்பனை 30.9 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய மந்தநிலை போன்ற காரணங்களால் இந்தியாவிலும் பொருளாதார சுணக்கம் காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வாகன உற்பத்தித் துறை மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. விற்பனை மற்றும் உற்பத்தி வீழ்ச்சியால் இந்திய ஆட்டோமொபைல் துறை மிகக் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறது.
அந்த நிறுவனங்களில் வேலை இழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்பனை குறைந்துள்ளதால் பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் பொதுமக்கள் பயன்படுத்தும் கார், பைக் போன்ற பயணிகள் வாகனங்களின் விற்பனை குறித்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி ஜூலை மாதம் அனைத்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் மொத்தமாகச் சேர்த்து 2,00,790 வாகனங்களை விற்றுள்ளனர். பயணிகள் வாகனங்களின் விற்பனை 30.9% குறைந்துள்ளது
இருசக்கர வாகனங்களின் விற்பனை 16.8 சதவீதமும், கார் விற்பனை 36 சதவீதமும் சரிவடைந்துள்ளன. ஜூலை மாதத்தில் வாகனங்கள் 122,956 என்ற அளவில் மட்டுமே விற்பனையாகியுள்ளன.
சரக்கு வாகன விற்பனையும் 25.7 சதவீதம் குறைந்துள்ளது. பயணிகள் வாகன உற்பத்தி 17 சதவீதம் குறைந்துள்ளது.
தொடர்ந்து 9 மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறை சரிவைச் சந்தித்து வருகிறது.