Published : 13 Aug 2019 10:57 AM
Last Updated : 13 Aug 2019 10:57 AM

தொழில் புரிய சிறந்த இடமாக இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி

இந்தியாவை தொழில் புரிய சிறந்த இடமாக மாற்றுவதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக இருக்கிறது. தனியார் துறையினர் நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அத்தனை முயற்சிகளையும் அரசு எடுத்துவருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, “வளர்ச்சி, பொருளாதார மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை குறித்து சர்வதேச அரங்குகளில் விவாதம் நடக்கும் போதெல்லாம் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம்தான் திரும்புகிறது. இந்தியாவிடமிருந்து இந்தியர்கள் மட்டுமல்ல, உலக நாடுகளும் அதிகமாக எதிர்பார்க்கின்றன. அந்த அளவுக்கு உலக அரங்கில் இந்தியாவின் நிலை மேம்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அரசு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதன் பலன்
களையும் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. தற்போது மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருப்பதால் இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு முன்பிருந்ததைவிட மேலும் அதிகரித்திருக்கிறது. அதை உணர்ந்து அரசு தீவிரமாகவும் மிக விரைவாகவும் செயலாற்றிவருகிறது.

மேலும் இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில் சூழலை மேம்படுத்துவதற்காக அறிவார்ந்த திறமையுள்ள நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து அரசு செயல்பட்டு வருகிறது. எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும், வகுக்கப்படும் ஒவ்வொரு கொள்கையும் இந்தியாவை தொழில் புரிய சிறந்த நாடாக மாற்றும் நோக்கத்தோடுதான் திட்டமிடப்படுகின்றன. என்று அவர் கூறினார்.

வளரும் நாடுகள் குறைந்த காலத்தில் அதிகபட்ச வளர்ச்சி விகிதத்தில் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை என்ற கண்ணோட்டத்தை இந்தியா மாற்றியிருக்கிறது. சர்வதேச வளர்ச்சி தேக்கமடைந்த நிலையிலும் இந்தியா கணிசமான வளர்ச்சியை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

தொழில்முனைவோர்களை நாட்டின் ‘வளர்ச்சி பிரதிநிதிகள்’ என்று நான் கருதுகிறேன். அவர்கள் தொழில் புரிய ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை. தற்போது சந்தையில் பணப்புழக்கம் சவாலாக உள்ளது. காரணம் வாராக்கடன், கடன் கிடைப்பதில் பிரச்சினைகள் உள்ளன. இவையெல்லாம் சரிசெய்யப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x