

பிரபல செய்தி மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான நெட்வொர்க் 18 மீடியா அண்ட் டிவி18 ப்ராட்காஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் 78% பங்குகளை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான இண்டிபென்டன்ட் மீடியா டிரஸ்ட் மூலம் நெட்வொர்க் 18-ஐ வாங்க உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நெட்வொர்க் 18-ன் 78% பங்குகளையும், டிவி18-ன் 9% பங்குகளையும் வாங்கியதன் மூலம் அந்த நிறுவனத்தின் முக்கிய பங்குகள் அனைத்தையும் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு அளித்தது. இதற்கான ஒப்பந்த மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிகிறது. இந்திய ஊடகத் துறையில் மிகப்பெரிய வர்த்தகமாக இது கருதப்படுகிறது.
இந்த நிலையில், நெட்வொர்க் 18-ன் தலைமை இயக்குனர்களான சாய் குமார் மற்றும் சாக்கோ ஆகியோர் தங்களது நிறுவன பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
திரைப்பட தயாரிப்பு, இதழியல், மொபைல் செய்திச் சேவை மற்றும் இ-காமர்ஸ் ஆகிய துறைகளை நிர்வகித்து வருபவரும் நெட்வொர் 18-ன் ஆசிரியர் மற்றும் நிறுவனரான ராகவ் பாஹல் இதனை உறுதி செய்துள்ளார். நிறுவனத்துக்குடனான தனது பொறுப்புகளை ஜூலை இறுதிக்குள் அவர் முடித்துக்கொள்வார் என ஆறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நெட்வொர்க் 18 மீடியா அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் லிமிடெட் நிறுவனத்துடன், அதன் துணை நிறுவனமான டிவி18 பிராட்காஸ்ட் லிமிடெட்டும் ரிலையன்ஸின் கட்டுப்பாட்டில் வரும். சி.என்.என் ஐ.பி.என், ஈ டிவி, பர்ஸ்ட் போஸ்ட்.காம், மனிக்கண்ட்ரோல்.காம், கலர்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்களை ரிலையன்ஸ் கூடிய விரைவில் இண்டிபென்டன்ட் மீடியா டிரஸ்ட் தனது நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ள உள்ளது.