

புதுடெல்லி
மத்திய அரசின் தற்போதைய பொருளாதார கொள்கைகளால் இந்தியாவில் தொழில் சூழல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என அனைத்திந்திய சரக்கு போக்குவரத்து சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
அனைத்திந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய போக்குவரத்து தொழில்நலச் சங்கம் ஆகிய இரண்டும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
ஜிஎஸ்டி மற்றும் சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட டீசல் மீதான செஸ் வரி, உத்தேச வரி உயர்வு மேலும் காப்பீட்டுக்கான பிரீமியம் உயர்த்தப்பட்டது என அரசின் ஒவ்வொரு கொள்கைகளும் இந்திய போக்குவரத்து தொழில் சூழலை கடுமையாகப் பாதித்துள்ளன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடிக்கு ரொக்கமாக எடுத்தால் 2 சதவீதம் வரிப் பிடித்தம் செய்யப்படும் என்ற முடிவும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் புதிய டிரக், லாரிகள் வாங்குவதை நிறுத்த இந்தச் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. தொழில் சூழல் சாதகமாக இல்லாத நிலையில் புதிதாக வாகனங்களை வாங்கி கடனில் மூழ்கி தவிக்க விரும்பவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது சங்கத்தினர் அனைவரின் ஒப்புதலுடனும் எடுக்கப்பட்டுள்ள முடிவு என அனைத்திந்திய போக்குவரத்து தொழில் நலச் சங்கத்தின் தலைவர் மகேந்திர ஆர்யா கூறினார்.