Published : 07 Aug 2019 03:39 PM
Last Updated : 07 Aug 2019 03:39 PM

முதலீடு வரத்து குறைவு; நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக குறையும்: ரிசர்வ் வங்கி கணிப்பு 

மும்பை

நடப்பு (2019-20) நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகக் குறையலாம் என்று ஜூன் மாதத்துக்கான நிதிக்கொள்கையில் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

அதேசமயம், நாட்டில் குறைந்துவரும் முதலீடு, பொருட்களின் தேவையில் ஏற்பட்டுள்ள மந்தத்தைக் குறைத்தல் போன்றவற்றைச் சரி செய்வது அவசியம் என ரிசரவ் வங்கி தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் 3-வது நிதிக்கொள்கையை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. இதில் குறுகிய கால கடனுக்கான வட்டி வீதமான ரெப்போரேட்டை 0.35 புள்ளிகள் குறைத்து 5.40 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. ஏற்கெனவே 3 முறை வட்டி வீதம் குறைக்கப்பட்ட நிலையில், 4-வது முறையாகவும் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்த தாஸ் நிதிக்கொள்கை கூட்டத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“நாட்டில் பொருட்களுக்கான தேவை குறைவு மற்றும் முதலீடுகள் எதிர்பார்த்த அளவுக்கு வராததால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று முதலில் கணிக்கப்பட்ட நிலையில், இப்போது அதை 6.9 சதவீதமாகக் குறைத்துள்ளோம்.

அதாவது நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாகவும், 2-வது பாதியில் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணித்துள்ளோம். இதுவும் மிகுந்த கடினமான இலக்குதான். இந்த சூழலில் இந்தப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு என்பது நிலையில்லாததுதான். அதாவது தற்காலிகமானதுதான். மோசமான சரிவு என்று கூற இயலாது.

அதேசமயம், பொருளாதாரக் கட்டமைப்புக்கான சீர்திருத்தங்கள் இந்த நேரத்தில் அவசியமாகிறது, அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அடுத்த நிதியாண்டில் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம்.

ரிசர்வ் வங்கியின் பல்வேறு ஆய்வுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவைக்கான சூழல்கள் கடுமையாக பலவீனமடைந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த சூழல் நிதியாண்டில் 2-வது பாதிக்குமேல்தான் சரியாகும் என்று கணிக்கிறோம்.

உள்நாட்டில் பொருளாதாரச் செயல்பாடு, தொழில்துறைச் செயல்பாடு பலவீனமாக இருப்பதும், சர்வதேசப் பொருளாதாரச் சூழல் மந்தமாக இருப்பதும், வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலும் பொருளாதார வளர்ச்சி குறைய காரணமாக இருக்கின்றன. இதைச் சரிசெய்ய உள்நாட்டில் தேவையை அதிகப்படுத்த வேண்டும், குறிப்பாக தனியார் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும்".

இவ்வாறு சக்திகந்த தாஸ் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x