

ஏற்றுமதிக்கான அனுமதிகளை ஒரே இடத்தில் பெறுவதற்காக ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்படும்’’ என அயல்நாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் பிரவீர் குமார் கூறினார்.
மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்ற சந்திப்புக் கூட்டம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய அயல்நாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் பிரவீர் குமார் கூறியதாவது:
ஏற்றுமதி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றி வருகிறது. எந்தவொரு நாட்டிலும் ஏற்றுமதிக்கு தேவையான அனைத்து வளங்களும் இருப்பதில்லை. உதாரணமாக, இந்தியாவில் பெட்ரோல் வளம் இல்லை. அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்தியாவில் பிராந்திய அளவில் கிடைக்கும் வளங்கள் மற்றும் மனித வளத்தைக் கொண்டு சிறப்பாக உபயோகிக்க வேண்டும்.
நாட்டில் பிராந்திய அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. புவியியல் ரீதியாக இந்தியாவில் வர்த்தகத்துக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. ஆனால், போதிய வேலைவாய்ப்பு இல்லை என்றால் பிராந்திய வேறுபாடு எதிரியாக மாறும். இந்த விஷயத்தில் வேலை வாய்ப்புகளை அளிப்பதில் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. சர்வதேச அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் கிரீஸ் நாடு. தற்போது ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி பெற வேண்டி பல்வேறு இடங்களில் மனு அளிக்க வேண்டி உள்ளது. இனிமேல் அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெற ஒற்றைச்சாளர முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரவீ்ர் குமார் கூறினார்.
முன்னதாக ஏற்றுமதி மண்டல அமைப்பின் மண்டல தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் தனது வரவேற்புரையில், அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தக தகவல் புள்ளி விவரத்தின்படி, இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து ஆறு மாதங்களாக குறைந்து வந்துள்ளது. இதன்படி, ஏற்றுமதி 20.19 சதவீதம் குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதாரம் தற்போது மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் குறைந்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரம் வலிமையாகும் வரை நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்படும். எனவே, அயல்நாட்டு வர்த்தகத் துறை விரைந்து செயல்பட்டு நாட்டின் ஏற்றுமதி பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், சுங்கத்துறை ஆணையர் பிரகாஷ் குமார் பெஹரா, சேவை வரி ஆணையர் ஜி.ரவீந்திரநாத், எப்ஐஇஓ அமைப்பின் முன்னாள் தலைவர் ரபீக் அஹமது, இணை துணை இயக்குனர் ஜெனரல் கே. உன்னி கிருஷ்ணன், உதவி இயக்குனர் என்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.