

புதுடெல்லி,
காஃபி டே நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் மறைவைத் தொடர்ந்து, இடைக்காலத் தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
காஃபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சித்தார்த், திங்கள்கிழமை மாலையில் இருந்து மாயமானார். தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள நேத்ராவதி ஆற்றின் குறுக்கே செல்லும் பாலத்தின் அருகே காரில் திங்கள்கிழமை மாலையில் சென்ற சித்தார்த்தா காரை பாலத்தில் நிறுத்தக் கூறி ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
சிறிதுநேரம் நடந்துவிட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றவர் நீண்டநேரமாகியும் காணவில்லை. அதன்பின் இரு நாட்கள் தேடுதலுக்குப் பின் ஆற்றில் அவரின் உடல் மீட்கப்பட்டது. சித்தார்த்தா உயிரிழந்ததால் காஃபி டே நிறுவனத்தின் சார்பில் இடைக்காலத் தலைவரை நியமிக்கும் கூட்டம் நடந்தது.
இதில் காஃபி டே நிறுவனத்தின் இடைக்காலத் தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சித்தார்த் மனைவி மாளவிகா ஹெக்டேவும் நிறுவனத்தில் ஒரு இயக்குநராக இருந்து வருகிறார். காஃபி டே நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் " நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டம் எடுத்த முடிவின்படி, இடைக்காலத் தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இடைக்கால தலைமை செயல் அலுவலராக நிதின் பாகமனே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இடைக்காலத் தலைவர் ரங்கநாத், தலைமைச் செயல் அதிகாரி நிதின் பாகமனே, சிஎப்ஓ ஆர். ராம் மோகன் ஆகியோர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கும்.
வி.சித்தார்த்தா இறுதியாக எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து கவனத்தில் கொள்ளும். கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து இன்னும் ஆராயப்படவில்லை. அவரின் கருத்துகள் தனிப்பட்ட ரீதியானதா அல்லது நிறுவனத்துடனா? என்பது தெளிவாக இல்லை.
இது குறித்து நிர்வாகக்குழு தீவிரமாக ஆய்வு செய்யும். அனைத்து தரப்பு பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், கடன் வழங்கியோர், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் நலன் காக்கும் வகையில் நிர்வாகக்குழு செயல்படும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஐ