இந்தியாவில் ரூ. 6,400 கோடி முதலீடு செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டம்

இந்தியாவில் ரூ. 6,400 கோடி முதலீடு செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டம்
Updated on
1 min read

அமெரிக்காவின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் 100 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது.

இந்திய மதிப்பின்படி ரூ.6,400 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது. ஆனால் குஜராத் மாநிலத்தில் உள்ள ஹலோல் ஆலையை மூட உள்ளதாகவும் கூறியுள்ளது. குஜராத்திலிருந்துதான் நிறுவனம் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை, இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மேரி பாரா சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் இந்த தகவலை கூறினார். நிறுவனம் அடுத்ததாக தெலங்கானா மற்றும், மஹராஷ்டிரா மாநிலங்களில் வாகன உற்பத்தியை தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை பொறுத்து 2016-ம் ஆண்டுக்குள் இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும், இங்கிருந்து ஏற்றுமதி திட்டத்தையும் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே நிறுவனம் அறிவித்திருந்தது. இதன்படி இந்த ஆண்டில் ஸ்போர்ட்ஸ் வாகனமாக செவர்லேட் ட்ரைபிலேசர் அறிமுகப்படுத்த உள்ளது.

இதைத் தொடர்ந்து பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட செவர்லேட் ஸ்பின் வாகனத்தை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ட்ரைபி லேசர் வாகனம் தாய்லாந்திலிருந்து முழுவதும் தயாரிக்கப்பட்ட வாகனமாக இறக்குமதி செய்யப்படுகிறது. ஸ்பின் வாகனம் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் வாகன விற்பனையை 30 நாடுகளுக்கு கொண்டு செல்ல இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு 984 வாகனங்களை சிலிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. நிறுவனம் சிலி மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 19,000 வாகனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிலிக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. பீட் மற்றும் ஸ்பார்க் மாடல்களை ஏற்றுமதி செய்தது. 2016 ல் 40,000 வாகனங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு வைத்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 1996ல் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்த இருபது ஆண்டுகளில் சுமார் 100 கோடி டாலர் இந்தியாவில் முதலீடு செய்தது. கடந்த ஆண்டு நிலவரப்படி நிறுவனம் ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.2,740 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த பாரா இந்திய சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in