

யோகோஹாமா:
முதலாம் காலாண்டு லாபம் முற்றிலும் சரிவு கண்டதையடுத்து ஜப்பான் கார் உற்பத்தித் தொழிலின் நம்பர் 2 நிறுவனமான நிஸான் தன் ஊழியர்களில் 12,500 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது.
மந்தமான விற்பனை, கார் உற்பத்தி மற்றும் நடைமுறைச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை காரணமாக முதலாம் காலாண்டு லாபம் முற்றிலும் இல்லாமல் போனது.
2022வாக்கில் இந்த பணிநீக்கங்கள் உலகம் முழுதும் நிறைவுறும் என்று நிஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 2022ம் ஆண்டு முடிவில் மொத்த உற்பத்தித் திறனை 10% குறைக்கவுள்ளதாகவும் அந்த நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது.
மார்ச் 2018 நிலவரங்களின் படி நிஸான் நிறுவனத்தில் உலகம் முழுதும் 138,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் முதலாம் காலாண்டு லாபம் 98.5% அடிவாங்கிய 14.80 மில்லியன் டாலர்களாக இருந்தது. வட அமெரிக்கச் சந்தை நிஸான் நிறுவனத்தை பெரிய அளவில் கைவிட்டதால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. போட்டிச் சந்தை என்பதால் போட்டி நிறுவனங்களுகுச் சரியாக நிற்க வேண்டும் என்பதற்காக வாகனச் சலுகைகளை பெரிய அளவில் அளித்ததால் நிஸான் பாதிக்கப்பட்டது.
மேலும் விற்பனையைப் பெருக்குவதற்காக பெரிய அளவில் டிஸ்கவுண்ட்டுகளை அளித்ததால் சந்தையில் நிஸான் நிறுவனத்தின் இமேஜ் சரிந்து விட்டது. மேலும் டிஸ்கவுண்ட்களினால் நிறுவன செலவுக்கணக்குகளும் எகிறியது.
லாப சரிவினால் நிஸானின் தலைமைச் செயலதிகாரி ஹிரோட்டோ சைகவாவுக்கு அதிக நெருக்கடிகளைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-ராய்ட்டர்ஸ்.