

கடந்த 14 ஆண்டுகளில் 61,000 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். வரி, பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கோடீஸ்வரர்கள் தங்களது தாய் நாட்டை விட்டு வெளியேறும் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் சீனாவில் இருந்து 91,000 பணக்காரர்கள் வெளியேறி இருக்கிறார்கள். 2000 முதல் 2014-ம் ஆண்டு காலகட்டத்துக்கான ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் இருந்து வெளியேறுபவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் (யூஏஇ) இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அதேபோல சீனாவில் இருந்து வெளியேறுபவர்கள் அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக அதிக வெளிநாட்டினர் சென்று குடியேறும் இடமாக இங்கிலாந்து இருக்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் இருந்து 1.25 லட்சம் கோடீஸ்வரர்கள் இங்கிலாந்தில் குடியேறி இருக்கிறார்கள்.
பிரான்ஸில் (42,000), இத்தாலி (23,000), ரஷ்யா (20,000) இந்தோனேஷியா (12,000), தென் ஆப்ரிக்கா (8,000) மற்றும் எகிப்தில் இருந்து 7,000 கோடீஸ்வரர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
இங்கிலாந்துக்கு வரும் கோடீஸ்வரர்களில் ஐரோப்பா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவில் இருந்து செல்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கணிசமாக எண்ணிக்கையில் செல்கிறார்கள்.
10 லட்சம் டாலருக்கு (சுமார். ரூ.6.4 கோடி) மேல் சொத்து இருப்பவர்கள் மட்டுமே இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.