Published : 16 Jul 2019 09:18 AM
Last Updated : 16 Jul 2019 09:18 AM

பயிர் காப்பீட்டை விவசாயிகளின் விருப்பத்துக்கு விட அரசு முயற்சி

புதுடெல்லி

விவசாயிகள் பயிர்களுக்கான காப்பீடு எடுப்பதை அவரவர் விருப்பத்துக்கே விட அரசு முயற்சி எடுத்துவருகிறது. 

2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதம மந்திரி ஃபசல் பீம யோஜனா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தவிர்க்க முடியாத இயற்கை சூழல்களால் ஏற்படும் இழப்புகளுக்காக காப்பீடு செய்யும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதில் குறைவான பிரீமியம் அளவில் காரிஃப் பயிர்களுக்கு 2 சதவீதமும், ராபி பயிர்களுக்கு 1.5 சதவீதமும், பூக்கள், பருத்தி உள்ளிட்ட வணிக பயிர்களுக்கு 5 சதவீதமும் விதிக்கப்பட்டது. 

ஆனால், இந்த காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்துவருவதால் இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. காப்பீடு திட்டத்தை எல்லோருக்கும் கட்டாயமாக்கும்போது அதன் பல்வேறு முரண்பாடுகளை உண்டாக்குகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.

இதனால் பிரதம மந்திரி ஃபசல் பீம யோஜனா திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் முக்கியமாக விவசாயிகள் பயிர்களுக்குக் காப்பீடு செய்வதை அவரவர் விருப்பத்துக்கு விட முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிக பிரீமியம் கொண்ட பயிர்களை நீக்குவது, மாநிலங்களுக்கான விதிகள் தளர்த்தப்பட்டு விவசாயிகளின் தேவைக்கேற்ப காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்த அனுமதி வழங்குவது போன்ற மாற்றங்களைச் செய்ய உள்ளது.

மேலும் மாநில அளவில் நிதி சேர்க்கப்பட்டு, அந்த சேமிப்பு நிதியை தேசிய அளவிலான காப்பீடு நிதியாக ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் காப்பீடு திட்டங்களால் காப்பீடு நிறுவனங்களே லாபமடைகின்றன என்ற பரவலான மக்களின் பார்வைக்கு முடிவுகட்ட அரசு முயற்சி எடுத்துள்ளது. 

மேலும், பயிர் இழப்புகளைக் கணக்கிடுவது, இழப்பீடு வழங்குவது போன்றவற்றின் அணுகுமுறைகளில் மாற்றங்களைத் திட்டமிட்டுவருகிறது. தொழில்நுட்ப உதவியின் மூலம் இவற்றை திறம்பட செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x