Published : 28 Jul 2015 10:52 AM
Last Updated : 28 Jul 2015 10:52 AM

தொழில் கலாச்சாரம்: ஹிட்லரைப் பற்றி பேச வேண்டாம்!

ஜெர்மனிக்குப் பல முகங்கள் உண்டு - பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ மதத்துக்கு அடிகோலிய மார்ட்டின் லூதர், கம்யூனிசத் தந்தை கார்ல் மார்க்ஸ், தத்துவ மேதை நீட்ஸே, மாபெரும் தலைவர்கள் வில்லி பிராண்ட், கொன்ராட் அடினார்: இரண்டாம் உலகப் போரில் அகிலத்தையே மிரட்டிய ஹிட்லர், அறிவியல் ஆராய்ச்சியில் தனி முத்திரை பதித்த வானியல் மேதை கோபர்னிக்கஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் உட்பட்ட 104 நோபல் பரிசுக்காரர்கள்; மொசார்ட், பீத்தோவன் போன்ற அமர இசை அமைப்பாளர்கள், டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப், கார் ரேஸ் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் , அடிடாஸ், ப்யூமா, மெர்சிடஸ் பென்ஸ், பாஷ், ஆடி, பேயர், மெர்க் போன்ற பாரம்பரியப் பன்னாட்டு நிறுவனங்கள் என பட்டியல் நீளும்.

இத்தனை பெருமைகள் கொண்ட ஜெர் மனிக்கு இந்திய அயல்நாட்டு வணிகத்திலும் முக்கிய பங்கு உண்டு. ஜெர்மனியுடன் ஏற்றுமதி வர்த்தக மதிப்பு ரூ. 46,059 கோடி. இறக்குமதி மதிப்பு ரூ. 78,188 கோடி. ஜவுளி, இயந்திரங்கள், ரசாயனங்கள், இரும்பு, உருக்குப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள் ஆகியவை நமது ஏற்றுமதியில் முக்கியமானவை. அவர்களிடமிருந்து வாங்கும் முக்கிய பொருட்கள் இயந்திரங்கள், கார்கள், எலெக்ட்ரானிக் கருவிகள், கெமிக்கல்கள், பிளாஸ்டிக்ஸ் போன்றவை.

வாருங்கள். ஜெர்மன் நாட்டையும், அந்தக் குடிமக்களையும் சந்திப்போம்.

பூகோள அமைப்பு

ஜெர்மனி ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கும் நாடு. முழுப்பெயர் ஜெர்மானியக் கூட்டுக் குடியரசு (Federal Republic of Germany). பால்டிக், வடக்குக் கடல்கள் அருகில். ஆஸ்திரியா, பெல்ஜியம், செக்கொஸ்லோவேக்கியா, டென் மார்க், ஃபிரான்ஸ், லக்சம்பெர்க், நெதர்லாந்து, போலந்து, ஸ்விட்சர்லாந்து ஆகியவை அண்டை நாடுகள்.

நிலப் பரப்பு 3,57,022 சதுர கிலோமீட்டர்கள். அதாவது, இந்தியாவில் (32,87,263) பத்தில் ஒரு மடங்கு. நிலக்கரி, இரும்புத் தாது, பொட்டாஷ், நிக்கல், யுரேனியம் ஆகியவை இயற்கை தந்திருக்கும் முக்கிய செல்வங்கள்.

மக்கள் தொகை

சுமார் 8 கோடி. ஐரோப்பிய நாடுகளுள் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. ஆனால், நம் ஜனத்தொகையில் சுமார் பதினைந்தில் ஒரு பங்குதான். ஆட்சிமொழி ஜெர்மன். மக்களுள் 34 சதவீதத்தினர் பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள்: 34 சதவீதம் கத்தோலிக்கர்கள்: 4 சதவீதம் இஸ்லாமியர்கள், பிறர் 28 சதவீதம் உள்ளனர்.

சுருக்க வரலாறு

சுமார் ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, இங்கு மக்கள் வசித்ததாகச் சொல்கிறார்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பழங்குடியினர் வசித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கி.பி. 7, 8 நூற்றாண்டுகளில் ரோமப் பேரரசோடு அடிக்கடி போர்கள் நடந்தன. 9 ம் நூற்றாண்டில் தேசம் தனி அரசியல் அமைப்பானது. 15 ம் நூற்றாண்டில், மார்ட்டின் லூதர் கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ மதம் பிறந்தது. மக்கள் தொகையில் கணிசமானவர்கள் புதிய மதத்துக்கு மாறினார்கள்.

அண்டைய பிரஷ்யாவில் ஆட்சிக்கு வந்த இரும்புத் தலைவர் பிஸ்மார்க் ஜெர்மானிய மக்களை ஒன்றிணைத்து, 1871 இல் ஜெர்மானியப் பேரரசை நிறுவினார். 1914 முதல் 1918 வரை முதல் உலகப் போர் நடந்தது. ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி ஆகியவர்களோடு, “மைய நாடுகள்” என்று அழைக்கப்பட்ட கூட்டணியில் ஜெர்மனி. பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா, “நேச நாடுகள்” என்னும் எதிர் அணியில். ஜெர்மனி படுதோல்வி கண்டது. ஏராளமான நிலப்பகுதிகளை இழந்தது.

பழிக்குப் பழி வாங்க, ஜெர்மனி ஹிட்லர் தலைமையில், இத்தாலி, ஜப்பான் ஆகியோரோடு கை கோர்த்தது. இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா ஆகியோரோடு இரண்டாம் உலகப் போர். ஜெர்மனிக்குப் படுதோல்வி. வெற்றி கண்டவர்கள் நாட்டை இரண்டாகப் பிரித்தார்கள். கிழக்கு ஜெர்மனி ரஷ்யா வசம். மேற்கு ஜெர்மனி அமெரிக்க ஆதரவில். 1990 இல் இரு பகுதிகளும் இணைந்து, இன்றைய ஜெர்மானியக் கூட்டுக் குடியரசு பிறந்தது.

ஆட்சி முறை

மக்களாட்சி. மேல்சபை, கீழ்சபை என இரண்டு மக்கள் மன்றங்கள் உண்டு. நாட்டுத் தலைவர் சான்சலர் (Chancellor) என்று அழைக்கப்படுகிறார்.

பொருளாதாரம்

ஐரோப்பிய நாடுகளிடையே வணிகத்தையும், நல்லுறவையும் வளர்க்கும் ஐரோப்பிய யூனியன் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய நாடுகள் இணைப்பு 1992 இல் அமைக்கப்பட்டது. இதற்கு முயற்சி எடுத்த நாடுகளில் ஜெர்மனி முன்னணி வகித்தது.

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இன்று ஜெர்மனிக்கு ஐந்தாம் இடம். ஆனால், சுமார் 15 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். இந்த மந்தத்தை நீக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகமாக்கவும், அரசாங்கம் தன் முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது.

நாணயம்

முன்பு, டாயிஷ் மார்க் (Deutsche Mark) நாணயமாக இருந்தது. 2002 இல் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒரே நாணய முறையை அமல்படுத்தினார்கள். அதன்படி, இப்போது நாணயம் யூரோ. இன்றைய மதிப்பின்படி, ஒரு யூரோ சுமார் 70 ரூபாய்.

விசிட்

மார்ச் முதல் நவம்பர் முடிய நல்ல பருவநிலை. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம். மைனஸ் ஒரு டிகிரிவரை குளிர் இருக்கும். இந்த மாதங்களில் பயணம் செய்யவேண்டிய கட்டாயம் வந்தால் வெயிலில் பழகிய நமக்குச் சற்றுச் சிரமமாக இருக்கும். தேவையான கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்லுங்கள்.

சில குறிப்புகள்

ஜெர்மனியர்களுக்கு 12 மணி என்றால், அது 11.59, 12.01, ஆகவோ இருக்கக்கூடாது. பனிரெண்டு மணி என்றால் 12.00 தான். அத்தனை கறாராக இருப்பார்கள்.

பிசினஸ் கூட்டங்களுக்கு கோட், சூட் அணியவேண்டும். அழுத்தமான கறுப்பு, நீல சூட், வெள்ளை அல்லது மென்மை நிறத்தில் சட்டை, டால் அடிக்காத டை அணியவேண்டும்.

ஜெர்மன் சமுதாயம் கல்வியை மிகவும் மதிக்கிறார்கள். ஆகவே, உங்கள் கல்விப் பட்டங்களை விசிட்டிங் கார்டுகளில் போடுவது நல்லது. சந்திக்கும்போதும், விடை பெறும்போதும் கை குலுக்குவது ஜெர்மனியர் பழக்கம், எதையும் மறைக்காமல் பேசுவார்கள். உங்கள் தயாரிப்புப் பொருட்களை அவர்கள் விமர்சித்தால், குமுறாதீர்கள். நேர்மையாக நடந்துகொள்கிறர்கள் என்று மகிழ்ச்சி அடையுங்கள்.

ஜெர்மானியர்களிடம் கதைவிடக்கூடாது. எதையும் ஆதாரம் இருந்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள். அதிக கால அவகாசம் தராமல், ஏராளமான விவரங்கள் கேட்பார்கள். மீட்டிங்குக்குப் போகுமுன், என்னென்ன கேள்விகள் கேட்பார்கள் என்று யூகித்துத் தயார் நிலையில் போகவேண்டும். அவர்களும், ஆதாரங்களோடுதான் பேசுவார்கள், கேட்ட விவரங்கள் தருவார்கள்.

பொருட்களின் தரத்தில் வெறித்தனமான நம்பிக்கை கொண்டவர்கள். சப்ளை செய்யத் தாமதமானாலும் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் தரம் குறைந்த பொருட்கள் சப்ளை செய்வது மகாபாவம் என்பார்கள். அவர்களிடம் பொருட்கள் வாங்கினாலும், அவர்களுக்கு விற்றாலும், மேலே சொன்னது பொருந்தும்.

உலகில் அதிகமாக பீர் குடிக்கும் நாடுகளில் ஜெர்மனி இரண்டாம் இடம் பிடிக்கிறது. சராசரியாக ஒரு ஜெர்மானியர் வருடத்துக்கு 110 லிட்டர் பீர் குடிக்கிறார். (முதல் இடம் செக்கொஸ்லோவேக்கியா சராசரி வருடத்துக்கு 143 லிட்டர்.) எனவே, கூட்டங்களில் பீர் பரிமாறப்படும்.

பேச்சு வார்த்தைகள் நடக்கும்போது, ஜோக் அடிப்பது அவர்களுக்குப் பிடிக்காது. அதேபோல், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், ஹிட்லர், நாஜிக்கட்சி, அரசியல் ஆகியவை குறித்துப் பற்றிப் பேசவேண்டாம். பேசுவதற்கு சிறந்த டாப்பிக் ஸ்போர்ட்ஸ்.

அரசு அதிகாரிகள் பரிசு வாங்குவது தடை செய்யப்பட்டிருக்கிறது. நிறுவன அதிகாரிகளுக்கு விலை அதிகமான பரிசுகள் தராதீர்கள். பேனாக்கள் தரலாம். ஜெர்மானியர்கள் நட்பையும், உறவையும் ஏற்படுத்துவதில் அவசரம் காட்டமாட்டார்கள். படிப்படியாக உருவாக்கும் உறவுகளைப் பெரிதும் மதிப்பார்கள். உங்களை வீட்டுக்குக் கூப்பிடுகிறாரா? உங்களை அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது என்று அர்த்தம். பூங்கொத்து வாங்கிக்கொண்டு செல்லுங்கள். உங்கள் உறவும், தொழிலும் அமோகமாக வளரும்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x