

நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறைகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்துறை களில் மிகப் பெரிய விரிவாக்க நடவடிக்கைகள் ரூ. 6 லட்சம் கோடியில் மேற்கொள்ளப் படுவதன் மூலம் 50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதுதவிர ரூ. 22 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியா இலங்கை இடையே இணைப்பை மேம்படுத்துவதற்கான திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. இத்திட்டத்துக்கு நிதி அளிக்க ஆசிய மேம்பாட்டு வங்கியும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்கரி தெரிவித்தார்.
சாலை போக்குவரத்துப் பணிகளுக்கு ரூ. 5 லட்சம் கோடியும், கப்பல் துறையில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான பணிகளையும் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அடுத்த 5 ஆண்டு களுக்குள் நிறைவேற்றப்படும். இதன் மூலம் நாட்டிலுள்ள 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த ஆண்டு இவ்விரு துறைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்த துறைகளில் நிலவும் தேக்க நிலை, ஊழல் உள்ளிட்டவற்றை களைந்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அண்டை நாடுகளுடனான இணைப்பை ஏற்படுத்தும் பணி களுக்கு முன்னுரிமை அளிக் கப்படுகிறது. வங்கதேசம், பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந் தத்தின் மூலம் இருதரப்பு வர்த்தகங்கள் அதிகரித்துள்ளன. இதேபோல இலங்கையுடனான இணைப்பு வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கட்கரி குறிப்பிட்டார்.
இந்தியா, இலங்கை இடை யிலான இணைப்பை ஏற்படுத்தும் திட்டப் பணிக்கான ரூ. 22 ஆயிரம் கோடியை அளிக்க ஆசிய மேம்பாட்டு வங்கி ஆர்வம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வங்கியின் துணைத் தலைவருடன் பேச்சு நடத்தினேன். அவரும் நிதியுதவி அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கட்கரி கூறினார்.
ராமேஸ்வரத்திலிருந்து இலங் கைக்கு நேரடியாக தொடர்பை ஏற்படுத்த 22 கி.மீ. தொலைவு போதுமானது. இப்போது சிறிய ரக படகு போக்குவரத்து மட்டுமே இப்பிரிவில் மேற்கொள்ளப்படு கிறது. விரைவிலேயே இந்தப் பகுதியில் போக்குவரத்து அதிக அளவில் நடைபெறுவதற்கான வசதிகள் செய்யப்படும்.
இதன் மூலம் டிரான்ஸ் ஆசிய சாலை இணைப்பு வசதியானது இலங்கைக்கும் நீட்டிக்கப்படும் என்று கட்கரி சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளிடையே மேம் பாலம் கட்டுவது அல்லது கடலுக்கடியில் சுரங்கம் அமைப்பது உள்ளிட்டவை மூலம் இணைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தடையற்ற வர்த்தகம் பெருக வழியேற்படும் என்றார்.
இந்தியா விரைவிலேயே மியான்மர் மற்றும் தாய்லாந்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந் தம் செய்து கொள்ள உள்ளது.
800 கோடி டாலர் மதிப்பில் வங்கதேசம், பூடான், இந்தியா, நேபாளம் இடையிலான சாலைவழி இணைப்பு திட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.
சாலைத் திட்டப் பணிகளில் அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளப்படும் பிபிஏ திட்டப் பணிகள் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தேக்கமடைந்திருந்தன. அவற்றுக்கு இப்போது புத்துயிர் அளிக்கப்பட்டு திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கட்கரி குறிப்பிட்டார்.
பிபிபி திட்டப் பணிகள் சரியாக இருக்காது என்று கூறியதால் கடந்த ஆண்டு 5 திட்டப் பணிகள் மட்டுமே கையெழுத்தாயின. பாஜக அரசு இது தொடர்பான தடை களை அகற்றியதால் கடந்த 3 மாதங்களில் 9 பெரிய திட்டப் பணிகள் பிபிபி அடிப்படையில் மேற்கொள்ள கையெழுத்தாகி யுள்ளதாக கட்கரி கூறினார். சோதனை அடிப்படையில் 17 திட்டப் பணிகளை அரசு மேற் கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதுவரையில் பிபிபி அடிப் படையில் மேற்கொள்ளப்படும் திட்டத்துக்கு ரூ. 13,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 6,300 கோடிதான் ஒதுக் கப்பட்டது. 2013-14-ம் ஆண்டில் 2 திட்டப் பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.
சாலை போக்குவரத்துத் துறையில் நிதிக்கு ஒருபோதும் தட்டுப்பாடு நிலவியது கிடையாது. இதுவரை 112 திட்டப் பணி களுக்கு இந்த அமைச்சகம் நிதி ஒதுக்கி செயல்படுத்தியுள்ளது. வெளிநாட்டு காப்பீட்டு நிறுவ னங்கள் மற்றும் ஓய்வூதிய திட்ட நிதி மற்றும் அரசு நிதி மூலம் இவை நிறைவேற்றப்பட்டுள்ளன.
பெரும்பாலான வெளிநாட்டு நிதிகள் 0.50 சதவீத வட்டியில் ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம் கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாக கட்கரி கூறினார். மேலும் இத்துறைக்கு பட் ஜெட்டில் ரூ. 42 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ரூ.70 ஆயிரம் கோடி தொகை யை கடன் பத்திர வெளியீடு மூலம் திரட்டலாம் என்றும் ரூ.7 ஆயிரம் கோடி முதல் ரூ.8 ஆயிரம் கோடி சோதனைச் சாவடி கட்டணம் மூலம் அரசுக்குக் கிடைக்கும் என்றும் இவற்றை 15 ஆண்டுகளுக்கு அடமானமாக வைத்தால் அதன் மூலம் ரூ. 1.20 லட்சம் கோடி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
மாநில அரசுகள் மாவட்ட சாலை களை மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றுவதன் மூலம் தேசிய வளர்ச்சிக்கு மாநிலங்கள் உதவ முடியும் என்று கட்கரி கூறினார்.
கப்பல் துறையில் ஏற்கெனவே உள்ள சில கப்பல்கள் எல்என்ஜி ஏற்றிவருவதற்கு ஏற்ப மாற்றப்படும் என்று குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 101 நதிகளை இணைத்து தேசிய நீர்வழி போக்குவரத்து வசதி ஏற்படுத்துவதற்கான மசோதா கொண்டுவரப்படும் என்று குறிப்பிட்டார்.