

பொதுமக்களிடமிருந்து சட்ட விரோதமாக நிதி திரட்டுவதாக மதுரையில் இயங்கும் எம்ஆர்டிடி நிறுவனத்துக்கு `செபி’ தடை விதித்துள்ளது. இந்த நிறுவனம் மற்றும் எம்ஆர்டிஎப் நிறுவனம் உட்பட இந்த நிறுவனத்தோடு தொடர்பு டைய மேலும் பத்து நபர்களுக்கு செபி தடை விதித்துள்ளது. மேலும் பொதுமக்களிடமிருந்து திரட்டிய ரூ. 5.32 கோடியை திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் இயங்கும் மதுரை ரூரல் டெவலப்மெண்ட் பெனிபிட் பண்ட் (இந்தியா) மதுரை ரூரல் டெவலப்மெண்ட் டிரான்ஸ்பர்மேஷன் இந்தியா மற்றும் மேலும் 10 தனி நபர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
செபி குறிப்பிட்டுள்ள தனிநபர் கள் நிதிச் சந்தையில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தோடு தொடர்புடைய முகம்மது யூசுப் சுரேஷ் பாட்சா, கோபாலரத்தினம் ராமரத்தினம், சீனிவாசன் ஸ்ரீகுமார், வாசுதேவன் பாலாஜி, காசிவிஸ்வநாதன் வெங்கட ராமன், நாகசுப்ரமணியண் ராஜ லெட்சுமி, சுதாகரன் லதாஜி, மும்தாஜ் பேகம் பாபா, சித்திக் பாஷா முகமது யூசுப் மற்றும் லிலுன் நிஹார் யூசுப் போன்ற வர்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
செபி வெளியிட்டுள்ள 19 பக்க அறிக்கையில் இவர்களும் மற்றும் இந்த நிறுவனங்களும் இணைந்து பொதுமக்களிடமிருந்து திரட்டிய 5,32,34,400 ரூபாயை திருப்பி அளிக்க உத்தரவிட்டுள்ளது. (எம்ஆர்டிடி மூலம் திரட்டிய தொகை ரூ.4,99,22,400. எம்ஆர்டிஎப் மூலம் திரட்டிய தொகை ரூ. 33,12,000)
இந்த தொகையை, பொது மக்களிடமிருந்து நிதி திரட்டிய தேதியிலிருந்து 15 சதவீத ஆண்டு வட்டியுடன் திருப்பி அளிக்க இந்த உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
எம்ஆர்டிடி மற்றும் எம்ஆர்டிஎப் இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து சட்டத்துக் குப் புறம்பாக பங்குகள் விற்பனை மூலம் நிதி திரட்டியுள்ளன. பொதுமக்களிடமிருந்து வைப்பு நிதி மற்றும் தொடர் வைப்பு நிதி மூலமாகவும் பணம் திரட்டப்பட்டுள்ளது என்றும் செபி கூறியுள்ளது.
செபி குறிப்பிட்டுள்ள பத்து நபர்களும் மற்றும் நிறுவனங் களும் பொதுமக்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தும் வரையில் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நிதி சந்தை தொடர்பான வர்த்தகங்களில் ஈடுபட தடை வித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பணத்தை செலுத்தியவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறைக்கு செபி அறிக்கை அனுப்பியுள்ளது