சென்செக்ஸ் 322 புள்ளிகள் ஏற்றம்: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு

சென்செக்ஸ் 322 புள்ளிகள் ஏற்றம்: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு
Updated on
1 min read

இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்று ஏற்றமான வர்த்தக சூழல் நிலவியது. இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 322 புள்ளிகள் உயர்ந்து 28504 புள்ளிகளில் முடிந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 104 புள்ளிகள் உயர்ந்து 8633 புள்ளிகளில் முடிந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தைகள் சந்தித்த அதிகபட்ச உயர்வு இது என்று முகவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனப் பங்குகள், வங்கிப் பங்குகள் நேற்றைய ஏற்றத்தில் அதிக லாபத்தைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப் 1.3 சதவீதம் ஏற்றம் கண்டது. ஸ்மால் கேப் பங்குகள் 0.90 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 4.26 சதவீதம் உயர்ந்தது. நேற்று மட்டும் இந்த பங்குகள் ரூ. 43 லாபம் கண்டு ரூ.1050.55 க்கு வர்த்தகம் முடிந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக மந்த நிலையில் இருந்த இந்தியப் பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றத்தைக் காணத் தொடங்கியுள்ளது என்று சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்திய சந்தைகளில் அந்நிய முதலீடு வரவு அதிகரித்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை சரிவு பங்குச் சந்தை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளதாக குறிப் பிட்டனர்.

சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றத்துக்கான சாதகமான அறிகுறிகள் இருப்பதும் சந்தை ஏற்றத்துக்கு காரணமாக உள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ஜீ எண்டர்டெயின்மெண்ட் 5.18%, ரிலையன்ஸ் 4.23%, சன் பார்மா 3.64%, எம் அண்ட் எம் 3.36%, ஆசியன் பெயிண்ட்ஸ் 3.34% பங்குகள் ஏற்றத்தைக் கண்டன.

லுபின் -3.25 %, ஐடியா செல்லுலார் -1.73%, பார்தி ஏர்டெல் -1.31%, டிசிஸ் -1.30%, இன்போசிஸ் -0.85.% ஆகிய பங்குகள் நேற்று சரிவை சந்தித்தன. நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் 1763 பங்குகள் ஏற்றத்தையும், 1059 பங்குகள் நஷ்டத்தையும் கண்டன.

செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 226 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்றிருக்கிறார்கள்.

ரூபாய் மதிப்பு சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. நேற்று வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 0.18 சதவீதம் சரிந்து 63.59 ஆக உள்ளது. அடுத்த வாரத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம் நடைபெற இருக்கிறது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் வட்டி உயரக்கூடும் என்று எதிர்பார்ப்பதால் டாலர் மதிப்பு அதிகரித்துள்ளது.

டாலர் மதிப்பு அதிகரித் துள்ளதால் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கள் 1,100 டாலருக்கு கீழே சரிந்து வர்த்தகமாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in