

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தொகையை கட்டுமானம் மற்றும் நலிவுற்ற பொதுத்துறை நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து மத்திய திட்டமிட்டு வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதே சமயத்த்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பிரச்சினையில் உள்ளன. இதில் 43 நிறுவனங்களை சீர்ப்படுத்த முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. அதனால் இந்த நிதியை பயன்படுத்த நிதிக்கழகம் (பைனான்ஸ் கார்ப்பரேஷன்) ஒன்றை அமைப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது.
இந்த தகவலை மத்திய கனரக ஆலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சர் ஆனந்த் கீதே தெரிவித்தார். இதுகுறித்து பல முறை விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய அமைப்பின் பெயர் மற்றும் அதன் பணிகள் குறித்து விவாதிக்கப்படவில்லை. இப்போதைக்கு ‘நிதிக் கழகம்’ என்று அழைக்கப்படுகிறது என்றார்.
இந்த நிறுவனம் ஒரு கூட்டு நிறுவனமாக இருக்ககூடும். ஏதேனும் ஒரு மகாரத்னா நிறுவனத்தின் நிதியை வைத்து புதிய நிறுவனம் தொடங்கப்படும்.
இந்த புதிய நிறுவனம் அமைப்பதற்கு என்டிபிசி தலைவர் அனுப்ராய் சவுத்திரி தலைமையில் ஒரு குழு கடந்த வருடம் அமைக்கப்பட்டது.
ரூ.15,000 கோடிக்கு தங்கப் பத்திரம்
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.15,000 கோடி அளவுக்கு தங்கப் பத்திரம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளை பத்திரங்களுக்கு கொண்டு வருவதன் மூலம் தங்கத்தின் தேவையை குறைக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இன்னும் ஒரு மாதத்துக்குள் இதற்கான அனுமதி கிடைக்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் 300 டன் அளவுக்கு தங்ககட்டிகள் வாங்கப்படுகின்றன. பத்திரம் வெளியிடும் போது அந்த முதலீட்டை இங்கு திருப்பமுடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
நடப்பு நிதி ஆண்டில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்ட தொகை தங்கப்பத்திரங்கள் மூலமாக கடன் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் (அதாவது செப்டம்பர் வரை) 3.6 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம் வைத்திருக்கிறது. இரண்டாம் பாதியில் மீதி தொகையை வாங்கும். அந்த சமயத்தில் தங்கப்பத்திரங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தங்கத்தின் தேவை குறைவது மட்டுமல்லாமல் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறையும். 2012-13-ம் ஆண்டு அதிகபட்சமாக 8,800 கோடி டாலர் (ஜிடிபியில் 4.7%) அளவுக்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை இருந்தது.
இந்த பத்திரங்கள் குறைந்தபட்சம் 2% அளவுக்கு வருமானம் கொடுப்பவையாக இருக்கும். இருந்தாலும் உண்மையான வருமானத்தை சந்தை தீர்மானிக்கும். 2கிராம், 5 கிராம் மற்றும் 7 கிராம் பத்திரங்கள் வெளியிடப்படும். குறைந்தபட்சம் 5-7 வருடங்களுக்கு முதலீட்டை திருப்பி எடுக்கமுடியாது.