

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
புதுடெல்லி: சர்வதேச விமானப் போக்குவரத்து தரவரிசை நிறுவனமான 'ஸ்கைட்ராக்ஸ்' 2026-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 5 விமான நிலையங்கள் உலகின் டாப்-100 பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளன.
தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், கடந்த ஆண்டை விட 4 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இது, ‘இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த விமான நிலையம்' என்ற விருதையும் தட்டிச் சென்றுள்ளது. அடுத்தபடியாக, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் 41-வது இடத்தை பிடித்துள்ளது.
இதைத் தொடர்ந்து 3-வது ஆண்டாக ‘இந்தியா மற்றும் தெற்காசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையம்' என்ற சிறப்பையும் இது பெற்றுள்ளது. கோவா மனோகர் சர்வதேச விமான நிலையம் 64-வது இடத்திலும், மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் விமான நிலையம் 66-வது இடத்திலும் உள்ளன. கோவா மற்றும் மும்பை விமான நிலையங்கள் கடந்த ஆண்டை விட தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2000-க்குப் பிறகு சாங்கி விமான நிலையம் இந்தச் சிறப்பைப் பெறுவது இது 14-வது முறையாகும். வெறும் விமான நிலையமாக மட்டுமின்றி, சுற்றுலா தலத்தைப் போன்ற கட்டமைப்பைக் கொண்டுள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணம். இதில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான உட்புற நீர்வீழ்ச்சியான ‘ஜுவல்', கலைக்கூடங்கள், பொழுதுபோக்கு மையங்கள், தோட்டங்கள் விமானப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.