

முதலீட்டுச் சந்தையின் வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த ஒரு வருட காலத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.4 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட் டுள்ளன.
நாட்டின் இரண்டு முதலீட்டு அமைப்புகளான என்எஸ்டிஎல் மற்றும் சிஎஸ்டிஎல் இரண்டும் ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி மொத்தமாக 2.37 கோடி டீமேட் கணக்குகள் அனுமதித்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டில் 2.2 கோடி கணக்குகளாக இருந்தது.
இந்த ஒரு வருட காலத்தில் கூடுதலாக 16.64 லட்சம் கணக் குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாதத்துக்கு சராசரியாக 1.39 லட்சம் முதலீட்டுக் கணக்குகள் தொடங்கப்பட்டுள் ளன.
என்எஸ்டிஎல் மற்றும் சிஎஸ்டிஎல் இரண்டு அமைப்பு களும் முதலீட்டாளர்களுக்கான டீமேட் கணக்கு தொடங்க அனுமதிக்கின்றன.
இந்த கணக்கு மூலம் பங்குகள், கடன்பத்திரங்கள், பாண்டுகள் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள் ளலாம்.
தற்போது வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள்படி என்எஸ் டிஎல் மூலம் கிட்டத்தட்ட 1.40 கோடி கணக்குகள் தொடங் கப்பட்டுள்ளன.
ஜூன் 30, 2015 தேதியோடு முடிவடைந்த ஆண்டில் இது கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 1.32 கோடி கணக்குகள் இருந்தன.
சிஎஸ்டிஎல் புள்ளி விவரங்கள் படி 98 லட்சம் முதலீட்டாளர்கள் சிஎஸ்டிஎல் அமைப்பில் கணக்கு தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 89 லட்சம் முதலீட்டாளர் கணக்குகளை இது அனுமதித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் கூடுதலாக 9.5 லட்சம் கணக்குகள் தொடங் கப்பட்டுள்ளன.
இது அதற்கு முந்தைய ஆண்டான ஜூன் 2013 முதல் ஜூன் 2014 காலகட்டத்தில் 8.3 லட்சம் கணக்குகளாக இருந்தது.
இது குறித்து குறிப்பிட்டுள்ள சந்தை வல்லுனர்கள், கடந்த ஆண்டில் டீமேட் எண்ணிக்கை அதிகரித்தற்குக் காரணம் சந்தையின் ஏற்றம், முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருந்ததுதான் என்றனர். புதிய பங்கு வெளியீடுகள் அதிகமாக இருந்ததும், முதலீடு மற்றும் காப்பீடு திட்டங்கள் அதிகரித்ததுமே காரணம் என்று குறிப்பிட்டனர்.
ஜூலை 01, 2014 க்கு பிறகான ஒரு வருட காலத்தில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு மற்றும் தேசிய பங்குச் சந்தை நிப்டி குறியீடு சுமார் 9 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் இந்த டீமேட் கணக்குகள் மூலம் 2015 ஜூன் மாத இறுதி நிலவரப்படி ரூ.131.26 லட்சம் கோடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 29 சதவீதம் அதிகமாகும் என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.