Published : 09 Jul 2015 09:44 AM
Last Updated : 09 Jul 2015 09:44 AM

சீன பங்குச் சந்தையின் சரிவு இந்தியாவிலும் எதிரொலித்தது: சென்செக்ஸ் 484 புள்ளிகள் சரிந்தது

சீன பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், அதன் பாதிப்பு ஆசிய சந்தைகளிலும் எதிரொலித்தது. நேற்றைய வர்த்தகத்தில் ஷாங்காய் காம்போசைட் குறியீடு 5.9 சதவீதம் சரிந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சீன பங்குச்சந்தைகள் சுமார் 30 சதவீதம் வரை சரிந்தன. சீன பங்குச்சந்தைகள் சரிவது கிரீஸ் பிரச்சினையைவிட பெரியதாக இருக்கும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் தெரிவித்திருக்கிறது.

இந்த சரிவைத் தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று என்று சீன அரசு தெரிவித்திருத்திருக்கிறது. சீனா இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்யப்படும் என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தாலும் சரிவைத் தடுக்க முடியவில்லை.

முக்கிய பொருள்களான தாமிரம், நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் இரும்புத்தாது ஆகியவை தொடர்ந்து சரிந்து வருகின்றன. தவிர வரும் ஜூலை 15-ம் தேதி இரண்டாம் காலாண்டு ஜிடிபி எண்கள் வெளியாக இருக்கின்றன. 7 சதவீதத்துக்கு கீழே இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதினால் சீன பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகளும் தொடர்ந்து சரிந்தன.

வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்தது. வர்த்தகத்தின் முடிவில் 484 புள்ளிகள் சரிந்து 27687 புள்ளியில் சென்செக்ஸ் முடிந்தது. அதேபோல நிப்டி 147 புள்ளிகள் சரிந்து 8363 புள்ளிகளில் முடிவடைந்தது.

வர்த்தகத்தின் இடையே 8341 புள்ளிகள் வரை சரிந்தது. இந்த ஏற்ற இறக்கம் மேலும் தொடரும் என்றே பெரும்பாலான சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த ஜூன் 2-ம் தேதி சென்செக்ஸ் 661 புள்ளிகள் சரிந்தது. அதன் பிறகு சந்தையில் ஏற்பட்ட சரிவு இப்போதுதான்.

சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 பங்குகளில் 29 பங்குகள் சரிவை சந்தித்தன. இதில் வேதாந்தா பங்கு அதிகபட்சமாக 8% சரிந்தது. அதேபோல மெட்டல் குறியீடு 4 சதவீதம் வரை சரிந்தது. கிரீஸ் பிரச்சினையால் டாலர் மதிப்பு பலமாகி வருகிறது. இதனால் காப்பர், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் பலமாக சரிந்தன. வேதாந்தா தவிர, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், என்.எம்.டி.சி ஜே.எஸ். டபிள்யூ ஆகிய பங்குகள் சரிந்தன. ஹிந்துஸ்தான் யூனிலிவர் பங்கு மட்டுமே உயர்ந்து முடிந்தது.

டாடா மோட்டார்ஸ் பங்கும் சரிவை சந்தித்தது. ஜாகுவார் லாண்ட்ரோவர் ஆகிய கார்களின் விற்பனையில் 20 சதவீதம் சீனா சந்தையில் இருப்பதால் இந்த பங்கு 6 சதவீதம் வரை சரிந்தது.

வங்கிப்பங்குகளும் கடுமையாக சரிந்தன. ஹெச்.டி.எப்சி. ஆக்ஸிஸ், யெஸ் வங்கி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் சரிந்து முடிந்தன.

ரூபாய் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக முந்தைய தினத்தை விட 16 பைசா சரிந்து ஒரு டாலர் 63.60 ரூபாயில் முடிவடைந்தது.

ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு

நேற்றைய பங்குச்சந்தை சரிவு காரணமாக 1.33 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருகிறது. இந்த சரிவு காரணமாக பி.எஸ்.இ.யில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1,02,55,829 கோடி ரூபாயாக இருக்கிறது. பி.எஸ்.இ.யில் 1791 பங்குகள் சரிந்தன, 948 புள்ளிகள் உயர்ந்து முடிந்தன. 110 பங்குகளில் மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x