

‘செல்பி’ புகைப்படம் மூலம் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய திட்டத்தை ‘மாஸ்டர் கார்டு’ அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு பாஸ்வேர்ட், ஓ.டி.பி., பின் கோட்ஸ், பிரிண்ட் சென்சார் என பல்வேறு தொழில்நுட்ப நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் குவிந்து வருகின்றன.
இதை தடுக்க ‘செல்பி’ புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டத்தை ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனம் சோதனை அடிப்படையில் அறி முகம் செய்துள்ளது. இதற்காக அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிடமும் அந்த நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ‘செல்பி’ திட்டம் குறித்து ‘மாஸ்டர் கார்டு’ நிறுவன மூத்த அதிகாரி அஜய் பல்லா கூறிய தாவது:
இன்றைய இளைஞர்கள் செல்பியை அதிகம் விரும்புகின்றனர், எங்களது புதிய திட்டம் அவர்களிடம் அமோக வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். பாஸ்வேர்டு உள்ளிட்ட முறைகளில் சில நேரங்களில் மோசடிகள் நடைபெறுகின்றன.
அதனால்தான் முகத்தை ஸ்கேன் செய்து வாடிக்கையாளரை அடையாளம் காணும் வகையில் செல்பி ஆன்லைன் பணப் பரிவர்த்தனை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். முதல்கட்டமாக அமெரிக்காவில் 500 பேர் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். விரைவில் உலகம் முழுவதும் செல்பி திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செல்பி ஆன்லைன் பணப் பரிவர்த்தனை திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட் போன்களில், மாஸ்டர் கார்டு செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் செல்பி புகைப்படம் எடுத்து பதிவு செய்ய வேண்டும்.
அதன்பின்னர் ஒவ்வொரு முறையும் உங்கள் முகத்தைக் காட்டினால் மட்டும் போதும். பாஸ்வேர்டு, ஓடிபி எதுவுமின்றி ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளலாம்.